அடல் புத்தாக்க இயக்கம், லா பவுண்டேஷன் டசால்ட் சிஸ்டம்ஸ் இந்தியா உடன் இணைந்து மாணவர் தொழில்முனைவோர் திட்டத்தின் 2023-24 பருவத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான அதன் முதன்மைத் திட்டமான ‘மேட் இன் 3டி தொழில்முனைவோருக்கான அடித்தளம்’ என்பதைக் கொண்டாடியது. இந்த நிகழ்வு இளம் மனங்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட எட்டு மாதப் பயணத்தின் முடிவாகும்.
இந்தத் திட்டத்தின் 2023-24 பருவம் மாணவர்களை வேளாண் அறிவியல் மையங்களுடன் இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தியது. இதன் விளைவாக கிராமப்புற சுற்றுச்சூழல் கருப்பொருளை மையமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான திட்டங்கள் உருவாகின. இந்தியா முழுவதும் உள்ள 140 பள்ளிகளிலிருந்து, முதல் 12 அணிகள் தயாரிப்பு வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க புதுமைகளை வெளிப்படுத்தின.
அடல் புத்தாக்க இயக்கத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ், டசால்ட் சிஸ்டம்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் தீபக் என்ஜி, டசால்ட் சிஸ்டம்ஸ் சொல்யூஷன்ஸ் ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுதர்சன் மொகசலே, புனேயில் உள்ள அக்ஷரா இன்டர்நேஷனல் பள்ளியின் தொழில்நுட்ப ஆலோசகர் ஜெயேஷ் ரத்தோர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் இந்திய கல்வி நிலப்பரப்பில் புதுமையின் முக்கியத்துவத்தையும், எதிர்கால கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பதில் திட்டத்தின் பொருத்தத்தையும் எடுத்துக்காட்டி எழுச்சியூட்டும் உரையை வழங்கினார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிகாலி கிராமப் பள்ளியான ஸ்ரீ தாதா மஹராஜ் நடேகர் வித்யாலயைச் சேர்ந்த மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர். புனேயில் உள்ள ஆர்க்கிட் பள்ளி இரண்டாவது இடத்தையும், தில்லியின் தவுலா குவானில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இந்த வெற்றிகள் இந்தியாவின் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பதில் திட்டத்தின் மாற்றத்தக்க தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
-PIB