சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படுமென, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை, 61.74% அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தத் திட்டம் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை – பெங்களூரு இடையேயான பயணத் தொலைவு மற்றும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு நான்குவழி உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகள், பல்வேறு கட்டங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை மற்றும் காரைப்பேட்டை – வாலாஜாப்பேட்டை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் பணிகள் 98.5% முடிவடைந்துள்ளதாகவும், ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை இடையிலான பணிகள் 56.92% அளவிற்கும் காரைப்பேட்டை – வாலாஜாபேட்டை பணிகள் 74.90% அளவிற்கும் முடிவடைந்துள்ளதாகவும், இந்தப் பணிகள் 2025 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும் எனவும் அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, சென்னை – திருப்பதி, மாமல்லபுரம் – முகையூர், தர்மபுரி – தொரப்பள்ளி, பொள்ளாச்சி – மடத்துக்குளம், திண்டிவனம் – கிருஷ்ணகிரி, மேலூர் – காரைக்குடி, விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் – பழனி, திருமங்கலம் – வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் எனவும் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-PIB