PM addressing at the Session-3 of the G20 Leaders Summit at Johannesburg, in South Africa on November 23, 2025.
‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ – முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசிய பிரதமர், சமமான அணுகல், மக்கள்தொகை அளவிலான திறன் பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் அணுகுமுறையை சுட்டிக் காட்டினார். இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் நாட்டில் உள்ள அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் உயர் செயல்திறன் கொண்ட கணினி திறன், கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய பலன்களை கொடுக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். வெளிப்படைத்தன்மை, மனித மேற்பார்வை, பாதுகாப்பு, தவறான பயன்பாட்டைத் தடுப்பது ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உலகளாவிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். செயற்கை நுண்ணறிவானது மனித திறன்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும், இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளில் 2026 பிப்ரவரியில் இந்தியா, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த முயற்சியில் இணையுமாறு அனைத்து ஜி20 நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
செயற்கை நுண்ணறிவு யுகத்தில், ‘இன்றைய வேலைகள்’ என்பதிலிருந்து ‘நாளைய திறன்கள்’ என்ற வகையில் நமது அணுகுமுறையை விரைவாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் கூறினார். புதுதில்லி ஜி20 உச்சி மாநாட்டில் திறன் பரிமாற்றம் குறித்து பேசப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், வரும் ஆண்டுகளில் திறன் பரிமாற்றம் குறித்த உலகளாவிய கட்டமைப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.
நிலையான வளர்ச்சி, நம்பகமான வர்த்தகம், அனைவருக்கும் செழிப்பு ஆகியவற்றுடன் உலகளாவிய நல்வாழ்வுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தி தமது உரையை நிறைவு செய்தார்.
