சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி, தொழில், ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்முனைவு (ஆர்ஐஎஸ்இ) மாநாடு 2026 குறிப்பிடத்தக்க சக்தியுடனும் நோக்கத்துடனும் நிறைவடைந்தது. இந்த இரண்டு நாள் மாநாடு துடிப்பான உரையாடல், உத்திசார் வலையமைப்பு மற்றும் எதிர்காலத்திற்கான ஒத்துழைப்புகளை விவாதித்தது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் தேசிய தொலைநோக்குடன் இணைந்து, ஆராய்ச்சி சிறப்பை உலகத் தாக்கமாக மாற்றுவதற்கான இந்தியாவின் கூட்டுத் தீர்மானத்திற்கு இந்த மாநாடு ஒரு சக்திவாய்ந்த சான்றாக அமைந்தது.
மாநாட்டில் தலைமை உரையாற்றிய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி துறை செயலாளருமான திருமதி என். கலைச்செல்வி, ஒருங்கிணைந்த கண்டுபிடிப்புச் சூழல் அமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் அறிவியல் தலைமைத்துவத்தையும் தொழில்நுட்ப தன்னம்பிக்கையையும் வலுப்படுத்துவதற்கு கூட்டு ஆராய்ச்சி மற்றும் பலதுறை கூட்டாண்மைகள் மிக முக்கியமானவை என்பதை அவர் எடுத்துரைத்தார்.
சிஎஸ்ஐஆர்-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பி. தணிகைவேலன் தனது வரவேற்புரையில், கல்வி-தொழில்துறை இணைப்புகள் வலுவாக இருப்பது ஏற்படுத்தும் திறனை அடிக்கோடிட்டுக் காட்டினார். தேசத்தின் முன்னேற்றம் என்பது அறிவுப் படைப்பாளர்களுக்கும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும் இடையிலான தடையற்ற ஒத்துழைப்பைப் பொறுத்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.
சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், சிஎஸ்ஐஆர் சென்னை வளாகத்தின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான டாக்டர் என். ஆனந்தவல்லி இந்த மாநாட்டின் கண்ணோட்டம் பற்றிக் கூறுகையில், ஆய்வக ஆராய்ச்சியை தொழில்துறைக்குத் தயாரான தீர்வுகளாக மாற்றும் நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்குவதே நிகழ்வின் நோக்கம் என்றார்.
கல்விப்புலம் –நிறுவனம்–தொழில்துறை கூட்டு அமர்வில் நிறைவுரையாற்றிய சிஎஸ்ஐஆர்- மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே. ரமேஷா, மாநாட்டின் வெற்றிக்கு பங்களிப்புகளை வழங்கிய பிரமுகர்கள், பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
இரண்டு நாள் நடைபெற்ற ஆர்ஐஎஸ்இ மாநாடு 2026, சிஎஸ்ஐஆர் – ன் சிறந்த விஞ்ஞானியும் சிஎஸ்ஐஆர்-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் கே. ஜே. ஸ்ரீராமின் நிறைவுக் கருத்துக்களுடன் நிறைவடைந்தது. இந்தியாவின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை செயல்படுத்த ஆராய்ச்சி மேன்மை , தொழில் நிபுணத்துவம், தொழில்முனைவோர் மனப்பான்மை ஆகியவை ஒன்றிணைந்து செயல்படும் ஒரு துடிப்பான கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான கூட்டுறுதியை அவர் வலியுறுத்தினார்.
