இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) சென்னை கிளை அலுவலகம் நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்வை 06.01.2025 அன்று நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து, தொழில்துறையினர் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் 2025 ஜனவரி 09 அன்று ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தரநிலை திருவிழாவை நடத்தியது.
இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநரும், தலைவருமான திருமதி ஜி. பவானி, அமைவனத்தின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிஐஎஸ் உரிமம் பெற்ற சுமார் 27 உரிமைதாரர்கள், தங்கள் துறை சார்ந்த அரங்குகளை அமைத்து, தர முத்திரை குறிக்கப்பட்ட தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியதுடன் இந்தத் தயாரிப்புகளில் பிஐஎஸ் சான்றிதழ்களின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 6000-க்கும் அதிகமான மாணவர்கள் இந்த அரங்குகளைப் பார்வையிட்டனர்; கட்டுரை எழுதுதல், விநாடி-வினா, ஓவியம், ஆங்கில பேச்சு, தரம் மற்றும் தரநிலைகள் பற்றிய புதையல் வேட்டை போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பிஐஎஸ் அதிகாரிகள் மாணவர்களுடன் உரையாடி, அமைவனத்தின் பல்வேறு திட்டங்கள், அவர்களின் அன்றாட வாழ்வில் பிஐஎஸ் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது பற்றி எடுத்துரைத்தனர்.