உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான 16-வது சி.ஓ.பி கூட்டத்தில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்டார். கொலம்பியாவின் காலியில், அக்டோபர் 30, 2024 அன்று, ‘குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்கான செயல்திட்டம் மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டம்’ என்ற சிறப்பு நிகழ்வின் போது இந்த ஆவணம் வெளியிடப்பட்டது.
கொலம்பியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துணை அமைச்சர் மொரிசியோ கப்ரேரா, பலதரப்பு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் திருமிகு கண்டியா ஒபேசோ, உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான நிர்வாக செயலாளர் திருமிகு ஆஸ்ட்ரிட் ஸ்கோமேக்கர், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் திரு தன்மய் குமார் மற்றும் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் தலைவர் திரு சி.அச்சலேந்தர் ரெட்டி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்புடன் இணைந்த புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டமானது, 2030-ஆம் ஆண்டளவில் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், 2050-ஆம் ஆண்டளவில் இயற்கையோடு இயைந்து வாழ்வது என்ற நீண்ட காலப் பார்வையுடன், உத்திகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கிய திட்டமாகும் என்று கூறினார். இந்தியா தனது செயல்திட்டத்தைப் புதுப்பிப்பதில் ‘முழுமையானஅரசு’ மற்றும் ‘முழுமையான சமூக’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டதாக அவர் எடுத்துரைத்தார். புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டம் சுற்றுச்சூழல் சவால்களை ஏற்றுக்கொள்வதுடன் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, இனங்கள் மீட்பு திட்டங்கள் மற்றும் சமூகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு, சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்சார் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான உத்திகளை கோடிட்டுக் காட்டுகிறது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
-PIB