
உலகின் தென்பகுதி நாடுகளைச் சேர்ந்த அமைதிகாக்கும் படையின் பெண்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் ஒரு குழுவினர் இன்று (பிப்ரவரி 24, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களின் பங்களிப்பு பன்முகத்தன்மை கொண்டதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது என்று கூறினார். அமைதி காக்கும் பெண்கள் படையினர் பெரும்பாலும் உள்நாட்டு சமூக அமைப்புகளுடன் நல்ல தொடர்பை கொண்டுள்ளதன் காரணமாக அவர்கள் முன்மாதிரியாகச் செயல்பட முடியும் என்று கூறினார். பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கும், நம்பிக்கையை வளர்ப்பதற்கும், பேச்சுவார்த்தைகளை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான பெண் வீராங்கனைகளைக் கொண்ட அமைதி காக்கும் படையானது வன்முறைகளைத் தடுப்பதற்கும் நீண்டகால அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். எனவே, ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்களைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
ஐநா சபையின் 50-க்கும் மேற்பட்ட அமைதி காக்கும் பணிகளில் 2,90,000-க்கும் மேற்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் பணியாற்றி வருவதை குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார். இன்று, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்காக செயல்பாட்டில் உள்ள 9 பாதுகாப்பு படைகளில் 5000-க்கும் மேற்பட்ட இந்திய அமைதி காக்கும் வீரர்கள் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். இந்திய பெண் அமைதி காக்கும் படையினர் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதில் முன்னணியில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று கூறினார். தற்போது நடைபெற்று வரும் ஆறு ஐ.நா தொடர்பான பாதுகாப்புப் படை பணிகளில் 154-க்கும் மேற்பட்ட இந்திய பெண் அமைதி காக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காங்கோவில் 1960-ம் ஆண்டுகளில் தொடங்கி, 2007-ம் ஆண்டில் லைபீரியாவில் பாதுகாப்பு பணி வரை, இந்தியாவின் பெண் அமைதி காக்கும் படையினர், தொழில்முறை மற்றும் நடத்தையில் மிக உயர்ந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.