மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (13.07.2024) செம்மொழி பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை தமிழ்நாடு சுகாதார மறுசீரமைப்பு திட்டம் கூட்டரங்கம் வரை உலக மக்கள் தொகை தினம் 2024 முன்னிட்டு உறுதிமொழி ஏற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றினார். அவை பின்வருமாறு:-
உலக மக்கள் தொகை தினம் 2024
1987 ஆம் ஆண்டு ஜீலை 13 நாள் தொடங்கி தற்போது வரை 38வது உலக மக்கள் தொகை தினம் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனுசரிக்கப்படுகிறது. “ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம் அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்” என்கின்ற கூற்றுப்படியும், தேசிய அளவில் “தாய் மற்றும் சேய் நல்வாழ்விற்கு சரியான வயதில் திருமணமும் போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது” என்னும் கருப்பொருள்படி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இந்தியாவின் மக்கள் தொகை 145.3 கோடி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 8.4 கோடி ஆகும். மக்கள் தொகையின், மொத்த கருவள விகிதம் (Total fertility rate) என்பது ஒரு தகுதி வாய்ந்த பெண்ணின் (வயது 15 to 49) வாழ்நாளில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை ஆகும். தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் 1000 மக்கள் தொகைக்கு 13.8, இந்தியாவினைப் பொறுத்தவரை 19.50 ஆகும். சிசுமரண விகிதம் பொறுத்தவரை ஆயிரம் குழந்தை பிறப்பிற்கு இந்தியாவில் 28.0. தமிழ்நாட்டில் 13.0 என்கின்ற அளவில் இருந்து வருகின்றது. மகப்பேறு மரணம் பொறுத்தவரை ஒரு இலட்சம் குழந்தை
பிறப்பிற்கு, இந்தியாவில் 97. தமிழ்நாட்டில் 45.6 என்கின்ற அளவில் இருக்கின்றது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 7.7% என்னும் நிலையில் உள்ளது. இது மேலும் குறைந்து பூஜ்ஜியம் என்னும் நிலையை 2035 ஆம் ஆண்டு அடைந்து மக்கள் தொகை வளர்ச்சியின் உச்சநிலையில் நிலைப்படுத்தப்பட்ட (Population Stabilisation Phase) மக்கள் தொகை நிலையை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தொடங்க உள்ளது.
அமெரிக்கா பயணம் குறித்தான கேள்விக்கு பதில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அமெரிக்கா நாட்டிற்கு கடந்த வாரம் சென்றிருந்தோம். அதில் அமெரிக்காவில் உள்ள சான் அன்டோனியா நகரத்தில் நடைபெற்ற பெட்னா (Federation of Tamil Association North America) 37வது தமிழ் மாநாட்டில் பங்கேற்று விருதுகள் வழங்கி விழா பேருரையாற்றினேன். அதுமட்டுமல்லாமல் ஹூஸ்டன் டெக்சாஸ் பியர்லேன்ட் பகுதியில் “தமிழ் இருக்கை” அமைய உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்விலும், தமிழ் இருக்கை தொடர்பான கருத்தரங்கம் நிகழ்விலும் பங்கேற்றிருந்தேன். மேலும் அமெரிக்கா, பாஸ்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு தொடர்பாக அதாவது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம், சிறுநீரகம் காப்போம் திட்டம், மக்களைத் தேடி ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினேன்.
மேலும் அமெரிக்கா, பால்டிமோர் நகரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய சிறப்புக்குரிய மருத்துவத் திட்டங்கள் பற்றி வகுப்பறையில் உரையாற்றும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது. இதில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கையினை ஏற்று நீரிழிவு நோய் தொடர்பான மருத்துவத்திற்கு அதாவது வராமல் தடுப்பது எப்படி, வந்த பின் தற்காத்துக் கொள்வது எப்படி போன்ற பல்வேறு தகவல்கள் அங்கே பேசப்பட்டது. அப்பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மேலும் Patient Safety என்கின்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம் மூலம் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் பொதுசுகாதாரம் என்கின்ற தலைப்பில் தொற்றா நோய்கள் தொடர்பாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதுபோன்று 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜான் பல்கலைக்கழகத்துடன் போடப்பட்டுள்ளது.
மேலும் ஹாப்கின்ஸ் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கும், பயிற்சி அளிப்பதற்குமான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்த பயணத்தினைப் பொறுத்தவரை மருத்துவக்கட்டமைப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் உலகவங்கி நிர்வாகிகளுடன் குறிப்பாக தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வாஷிங்டனில் உள்ள உலக வங்கி தலைமையகத்தில் உலக வங்கி தலைவர் திரு.மார்டின் ரைசர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் நிதி ஆதாரம் மற்றும் செயல் திட்டங்கள் குறித்த அமர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ திட்டங்கள் தொடர்பாக உலக வங்கி தலைவர்களுக்கு Presentation செய்து காட்டப்பட்டது, அவர்கள் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் தொடர்பாக வியந்து பாராட்டினார்கள். மேலும் உலக வங்கியுடன் 100% நிதியுதவி பெற்று தமிழ்நாட்டு மருத்துவ கட்டமைப்புகளை அடுத்த கட்டத்திற்கு நோக்கி செல்லும் வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
டெங்கு குறித்தான கேள்விக்கு பதில்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் மழைக்காலங்களில் டெங்கு அதிகம் பரவாத அளவிற்கு நடவடிக்கை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை டெங்கு பாதிப்பு என்பது கட்டுக்குள்தான் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 12.07.2024 வரை டெங்கு பாதிப்பு என்பது 5554 ஆக இருக்கிறது என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதிஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் திரு.கோவிந்தராவ், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.இராஜமூர்த்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், குடும்பநலத்துறை இயக்குநர் மரு.கிருஷ்ணா, சுகாதாரம் மற்றும் குடும்பநல முதன்மை மண்டல இயக்குநர் மரு.நிர்மல் ஜோ மற்றும் உயரலுவர்கள், செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை