சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்துடன் (Finnish Meteorological Institute – FMI) இணைந்து வாயு (VAYYU) என்ற மையத்தை உருவாக்குகிறது. இது ஏரோசல்-வானிலையியல் தொடர்புகள், இமயமலை வளிமண்டலம்- கிரையோஸ்பியர் தொடர்புகள், நகர்ப்புற காற்று பற்றிய மெய்நிகர் ஆராய்ச்சி மையமாகும்.
இந்த புதிய மையம், மேம்பட்ட உருவகப்படுத்தல்கள், அதிநவீன கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். பிராந்திய நீர்-காலநிலை (hydro-climate), இமயமலையின் பனி, பனியாறு உருகுதல், இந்தியப் பெருநகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் ஆகியவற்றின் மீது ஏரோசல்கள் (aerosols) எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நன்கு புரிந்துகொள்ள இம்மையம் உதவிகரமாக இருக்கும்.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சித் துறை டீன் பேராசிரியர் சாந்தி பவன், ஐசிஎஸ்ஆர் டீன் பேராசிரியர் மனு சந்தானம், வாயு ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளரும், சிவில் என்ஜினியரிங் துறை பேராசிரியருமான பேராசிரியர் சந்தன் சாரங்கி, பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவன தலைமைப் பொறுப்புகளில் உள்ள பேராசிரியர் பெட்டேரி தாலஸ், பேராசிரியர் ஹன்னெல் கோர்ஹனன். டாக்டர் ராகேஷ் கே.ஹூடா ஆகியோர் சமீபத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒத்துழைப்பை வரவேற்றுப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “காலநிலை மாற்றம் மற்றும் கண்காணிப்பு உலகளாவிய தளத்தில் ஆராயப்பட வேண்டிய மிக முக்கியமான துறையாகும். இந்த மிக முக்கியமான ஆராய்ச்சியில், பின்லாந்து வானிலை ஆய்வு மையத்துடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
பின்லாந்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் பேராசிரியர் பெட்டரி தாலாஸ் கூறுகையில், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஐஐடி மெட்ராஸ் உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவும் இந்த பரந்த உலகமும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள, இமயமலை ஏரோசல்கள் மீதான மூன்று ஆண்டுகால கூட்டுப் பணியினை மேற்கொள்ளவிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டாண்மை காலநிலை அறிவியல், நகர்ப்புற நிலைத்தன்மை மற்றும் அடுத்த தலைமுறை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்திய-பின்லாந்து ஒத்துழைப்பை கணிசமாக மேம்படுத்தும். அத்துடன் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் மெட்ராஸ் ஐஐடி-யின் உலகளாவிய ஈடுபாட்டையும் வலுப்படுத்துகிறது.
பின்லாந்துக்கான இந்தியத் தூதர் திரு. ஹேமந்த் எச்.கோட்டல்வார் கூறும்போது, “VAYYU மூலம் மேற்கொள்ளப்படும் இந்தியா-பின்லாந்து ஒத்துழைப்பு, இருதரப்பு அறிவியல்ரீதியான நட்புறவில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். ஐஐடி மெட்ராஸ்-ன் மாதிரியாக்கத் திறன், பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுவதால், பருவமழை, நகர்ப்புற ஆரோக்கியத்திற்கு ஏரோசல்களால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள உதவும். இந்த மெய்நிகர் மையம், இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு நீர்-வானிலை, காற்றின் தர மேலாண்மை ஆகியவற்றுக்கான அதிநவீன கருவிகளை வழங்குவதுடன் நிலையான வளர்ச்சிக்கான இலக்கையும் வலுப்படுத்தும்” என்றார்.
இந்தியாவுக்கான பின்லாந்து தூதர் திரு. கிம்மோ லஹ்டேவிர்தா கூறுகையில், “தெற்காசியாவில் நிலவும் அழுத்தமான சவால்களை எதிர்கொள்ள, ஏரோசல் இயக்கவியல், வானிலை கணிப்பில் பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், கூட்டு காலநிலை அறிவியலில் பின்லாந்தின் அர்ப்பணிப்புடன் கூடிய இந்த கூட்டு முயற்சி எடுத்துக்காட்டுகிறது. பருவமழை, காற்றின் தரம் ஆகியவற்றில் ஏரோசல்களின் தாக்கங்களை மாதிரியாக்கம் செய்வதற்கு VAYYU கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும். பிராந்திய அளவில் பயன்படுத்தக்கூடிய கூட்டுக் கொள்கைகளுக்கு வழிவகுக்கும்,” என்றார்.
ஐஐடி மெட்ராஸ்- பின்லாந்து வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இரு முக்கிய சர்வதேச ஆராய்ச்சி முயற்சிகளின் அடிப்படையில்தான் VAYYU உருவாக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஒன்று, ஐரோப்பிய ஒன்றியம், SERI (சுவிட்சர்லாந்து), இந்திய புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றால் கூட்டாக நிதியளிக்கப்படும் க்ரையோஸ்கோப் திட்டமாகும். இதன் மொத்த முதலீடு சுமார் 10 மில்லியன் யூரோக்கள். இமயமலையின் கார்கில் பகுதியில் உள்ள சிறப்பு ஆய்வுத் தளத்தில், வளிமண்டலம்-பனிக்கோளம்-நீர்க்கோளம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை ஆராயவும், பனியாறுகள் உருகுவதை விரைவுபடுத்துவதிலும், வறட்சி/வெள்ள நிலைகளிலும் ஏரோசல்களின் பங்கை அளவிடவும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளை கிரையோஸ்கோப் நிறுவியுள்ளது..
இரண்டாவதாக, பின்லாந்து ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவி அளிக்கும் CO-ENHANCIN திட்டம், ஐஐடி மெட்ராஸ்-ன் புதிய நகர்ப்புற ஆய்வகத்தை சென்னையில் அமைக்க உதவியுள்ளது. சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான இந்த ஆய்வகம், ஐஐடி மெட்ராஸ்-ன் செயற்கைக்கோள் வளாகத்தில் அமைந்துள்ளது. கடலோர வெப்பமண்டல பெருநகர சூழலை இது தனித்துவமாக பிரதிபலிக்கிறது. நிலம்-வளிமண்டல எல்லை அடுக்கு செயல்பாடுகள் மற்றும் ஏரோசல்-மேகம்-மழை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் இந்த மையத்தில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
