கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை முன்னிட்டு. வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு கன்னியாகுமரியில் பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைக்கான தேர்தல் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணிநேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார். இதற்காக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று மாலை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 5.08 மணிக்கு வந்தார். மாலை 5.40 மணி அளவில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சென்றார். அவருக்கு, பகவதியம்மனின் திருவுருவப் படத்தை, கோயில் மேலாளர் ஆனந்த் வழங்கிவரவேற்றார். கோயில் கொடிமரத்தை சுற்றி வணங்கிய பிரதமர், சந்நிதிக்கு சென்று அம்மனை வழிபட்டார்.
அங்கிருந்து மாலை 6 மணிக்கு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தர்’ என்ற படகில் பயணித்து, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். அப்போது, பிரதமரின் படகைச் சுற்றிலும் வளையம்போல பாதுகாப்பு படையினர் தனிப்படகுகளில் வந்தனர். மாலை 6.15 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர், தியான மண்டபத்தில் உள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி ஆகியோரது சந்நிதிகளிலும், சுவாமி விவேகானந்தரின் முழுஉருவ வெண்கல சிலைக்கும் மலர்தூவி வணங்கினார். இரவு 7 மணிக்கு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.
தொடர்ந்து 5 மணி நேரம் தியானம், அதன் பிறகு சிறிது ஓய்வு என நாளை மாலை வரை 45 மணி நேரத்துக்கு தொடர் தியானத்தை பிரதமர் மேற்கொள்கிறார். 5 மணி நேரத்துக்கு ஒருமுறை எடுக்கும் ஓய்வைத் தவிர, பிரதமர் தூங்கப் போவதில்லை. ஓய்வு சமயத்தில் இளநீர், பழச்சாறு மட்டும் அருந்துகிறார். நாளை (1-ம் தேதி) மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் கடல், வான் மற்றும் தரைவழியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலில் உள்ள விவேகானந்தர் பாறையின் 3 கி.மீ. சுற்றளவுக்கு படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், இந்தப் பாறைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மெரைன் போலீஸாரும், கமாண்டோ நீச்சல் வீரர்களும் இரவும், பகலும் ரப்பர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.