மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு விஜய் குமார், ஜனவரி 27, 2026 அன்று சென்னைத் துறைமுக ஆணையத்தில் துறைமுக செயல்பாடு, நிதி செயல்திறன்களையும், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களையும் ஆய்வு செய்தார். இந்தியாவை உலகின் முன்னணி கடல்சார் நாடுகளில் ஒன்றாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கடல்சார் அமிர்தக் கால தொலைநோக்குப் பார்வை 2047 பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

54.27 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 திட்டங்களையும் செயலாளர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அவர், மூத்த துறைமுக அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, ஒட்டுமொத்த துறைமுக செயல்திறன், சொத்து பணமாக்குதல், கடல்சார் இந்தியா தொலைநோக்குப் பார்வை 2030, கடல்சார் அமிர்தக் கால தொலைநோக்குப் பார்வை 2047 ஆகியவற்றின் கீழ் முன்முயற்சிகளை செயல்படுத்துதல் மற்றும் நடந்து வரும் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தனது பயணத்தின் போது, திரு விஜய் குமார், துறைமுக பங்குதாரர்களுடன் கலந்துரையாடினார். இந்திய அரசின் சமீபத்திய முயற்சிகள் மற்றும் ஒட்டுமொத்த தொலைநோக்குப் பார்வை குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
