சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), மாணவர்களுக்கு நவீன மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பாடத்திட்டத்தின் தேவை மற்றும் நெகிழ்வுத்தன்மை அடிப்படையில் இந்தியாவிற்கான பி.டெக் பாடத்திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்திட்டங்களிலிருந்து முன்கூட்டியே வெளியேறவும் அனுமதிக்கப்படுவார்கள்.
வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனம் ஒன்றின் பாடத்திட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பி.டெக் படிப்பின் இரண்டாம் ஆண்டிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெகிழ்வுத்தன்மை, இடைநிலைக் கற்றல் அதிகரிப்பு, செயல்திட்டங்கள், தொழில் முனைவோர் வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கும் வகையில் கல்வி அமைப்பை இக்கல்வி நிறுவனம் புதுப்பித்துள்ளது.
முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் அளித்த விரிவான கருத்துகளுக்குப் பின் பி.டெக் பாடநெறி காலஅளவு சீரமைக்கப்பட்டு, பட்டப்படிப்புக்கான கால அளவு 436 மணி நேரத்தில் இருந்து 400 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் தொழில் முனைவு சாத்தியக்கூறுகளை மாணவர்கள் ஆராய்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது.
ஐந்தாண்டு பி.டெக் மற்றும் எம்.டெக் பட்டங்களுடன், நானோ டெக்னாலஜி, தரவு அறிவியல், மின்சார வாகனங்கள் மற்றும் தொழில்துறைக்குத் தேவைப்படும் அதிநவீனக் களங்களில் இடைநிலைப் பட்டங்களையும் சென்னை ஐஐடி வழங்குகிறது. மாணவர்கள் இப்பட்டங்களுக்கான படிப்புகளை தங்களின் பி.டெக் பாடத்திட்டத்துடன் தடையின்றி தொடரலாம்.
தனித்துவமான இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு மாணவர்களை வரவேற்ற சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்கு சென்னை ஐஐடி எப்போதும் அதிக முன்னுரிமை அளிக்கும். கடந்த நிதியாண்டில் 380-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மூன்று நாட்களுக்கு ஒரு ஸ்டார்ட்அப் என 100 ஸ்டார்ட்அப்களுக்கான திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
மாணவர்கள் தங்கள் படிப்புகளில் சுமார் 40 சதவீத பாடநெறியை தனதாக்குதல் மற்றும் தனிப்பயன்பாடாக்குதல் என்ற வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். சென்னை ஐஐடி 18 கல்வித் துறைகள் மற்றும் பல்வேறு மேம்பட்ட ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது, இது மாணவர்கள் பல்வேறு ஆர்வங்களை பரிசோதிக்கவும் தனித்துவமான கல்வியை உருவாக்கவும் அனுமதிக்கிறது .
இதற்கான வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்த, சென்னை ஐஐடி டீன் (கல்வி பாடப்பிரிவுகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், “சென்னை ஐஐடி, மாணவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த உதவும் பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது. திறமையுடன் கூடிய போட்டித்தன்மைக்கானது. புதிய பாடத்திட்டத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் பிற அம்சங்களால் மாணவர்கள் கற்றலின் ஆர்வத்தை மீண்டும் பெற முடியும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.
இந்த முக்கிய மாற்றங்களின் காரணமாக பாடத்திட்டத்தை மாற்றிக் கொள்ளும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனம் மாற்று வழிகளைத் தொடர ‘முன்கூட்டியே வெளியேறும்’ விருப்பத்தையும் கொண்டுள்ளது.
சென்னை ஐஐடி முதலாமாண்டு மாணவர்களுக்கு நான்கு வார கூடுதல் விடுமுறையுடன் மேம்பட்ட அனுபவத்தையும் வழங்குகிறது. இதுதவிர புதிய ‘பொழுதுபோக்கு’ பாடத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தங்கள் இரண்டாம் ஆண்டு தொடக்கத்திலேயே தொழில்முனைவோர் விருப்பத்தேர்வை மேற்கொள்ளலாம்.