மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில், ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் காரைக்காலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் திரு. வி. பழனிச்சாமி, “செய்திகளில் உண்மைத்தன்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். செய்தித் துறையில் பரிணமித்துள்ள செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை மிகவும் நுட்பமாகக் கையாள வேண்டும் என தெரிவித்தார். அரசு செயல்படுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செய்திகள் அமைய வேண்டும் என்றும், சமுதாயத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான தகவல்களை மட்டுமே செய்தியாக வெளியிட வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொழில்நுட்ப அமர்வில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடகத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். பிரான்சிஸ் பார்க்லே, “செய்தித் துறையில் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஊடகவியலாளர்களுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் மென்பொருட்கள் குறித்தும், செய்திகளைச் சேகரிக்கவும், சரிபார்க்கவும் மற்றும் தொகுக்கவும் இந்தத் தொழில்நுட்பங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அவர் விரிவான விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் ரேவதி, “ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களுக்கான சுவாரஸ்யமான செய்திகளாக மாற்றுவது எப்படி?” என்பது குறித்து உரையாற்றினார். என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் சிக்கலான தொழில்நுட்ப ஆய்வுகளை, சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் கொண்டு சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.
நிதி மேலாண்மை குறித்த அமர்வில், பிரதமரின் ஜன் தன் வங்கி கணக்கு திட்டம், ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம், சுரக்ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் போன்ற நிதிசார் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் பொதுமக்கள் பயன்பெறவும், கேஒய்சி (KYC) புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பில் இந்திய உணவுப் பாதுகாப்புக் கழகத்தின் (FCI) பங்களிப்பு குறித்து உணவுப் பாதுகாப்புக் கழகத்தின் புதுச்சேரி மற்றும் கடலூர் கோட்டத்தின் மேலாளர் ஆர். பி. மீனா மற்றும் குழுவினர் விளக்கமளித்தனர். முன்னதாக, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநர் திருமதி. ஜெ. விஜயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.
