
சேலத்தில், போலி ஆவணங்களை உருவாக்கி நிலத்தை பத்திரப் பதிவு செய்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இடங்கணசாலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (73) கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாவட்ட எஸ்பி கௌதம் கோயலிடம் புகார் அளித்தார்.
அதில், தனது தாய் கந்தாயி பெயரில் 13.75 சென்ட் நிலத்தை, போலி இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் தயாரித்து, சகோதரர் கந்தசாமி மற்றும் அவரது மகன்கள் மாணிக்கம், அருணாசலம் ஆகியோர் 2022ஆம் ஆண்டு மகுடஞ்சாவடி சார் பதிவகத்தில் பத்திரப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதற்காக சார்பதிவாளர், துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உட்பட சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆவணங்கள் உண்மையிலேயே போலியாக உருவாக்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, கந்தசாமி (இறந்துவிட்டார்), அவரது மகன்கள் மாணிக்கம், அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர் கோபால், சங்ககிரி துணை தாசில்தார் ஜெயக்குமார், பத்திர எழுத்தர் செந்தில்குமார், அப்போதைய மகுடஞ்சாவடி சார்பதிவாளர் கோவிந்தசாமி உள்பட 10 பேருக்கு எதிராக கூட்டுசதி, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.