திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா 29.05.2024 அன்று நடைபெற்றது. இதில் 467 மாணவிகள் மற்றும் 387 மாணவர்கள் என மொத்தம் 854 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர் பத்மபூஷன் பேராசிரியர் திரு ஜி.பத்மநாபன் தலைமை வகித்தார். விழாவில் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் பத்மபூஷண் ஜி.பத்மநாபன் தமது உரையில், “மாணவர்கள் தங்கள் விருப்பங்களை அடைவது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில், பங்காற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு போன்ற நபர்களிடமிருந்து உத்வேகம் பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் தமது உரையில், 2024-ம் ஆண்டில் என்ஏஏசி-யின் மதிப்பீட்டின் 2-வது சுற்றில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஏ+ அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்று தெரிவித்தார்.
உன்னத் பாரத் அபியான் திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம், இந்தப் பல்கலைக்கழகம் கிராமங்களை தத்தெடுத்து சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார்.
கல்வி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து பேசிய அவர், புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களுடன் கல்வி ஒத்துழைப்பு முயற்சிகளில் இந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தப் பல்கலைகழகம் செயல்படுவதாக திரு கிருஷ்ணன் தெரிவித்தார்.
-PIB