
தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது. நேற்று (27.01.2025) தொடங்கிய இந்தப் பயிலரங்கு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க நிலை பயிற்சியாளர்களுக்கான இந்தப் பயிலரங்கு புவிப்பரப்பு தொழில்நுட்பங்களின் அடிப்படைகளை அறிமுகம் செய்தல், தொலை உணர்வு, புவிசார் வரைபட தகவல் முறை, உலகளாவிய நிலப்பகுதி வழிகாட்டுதல் செயற்கைக் கோள் நடைமுறைகள், ட்ரோன் மூலம் ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்தப் பயிலரங்கை மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஆர்.திருமுருகன், தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் பேராசிரியை சுலோச்சனா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமகால ஆய்வு, நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் நிர்வாகம், தரவு அடிப்படையிலான முடிவு மேற்கொள்ளும் நடைமுறைகள் ஆகியவற்றில் புவிப்பரப்பு தொழில்நுட்பங்களின் முக்கியப் பங்களிப்பு குறித்து பயிரலங்கின் தொடக்க அமர்வில் பேராசிரியர் கிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
இந்த 5 நாள் பயிலரங்கில் பங்கேற்பாளர்கள் 18 தொழில்நுட்ப அமர்வுகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த அமர்வுகளுக்கு புவி அறிவியல் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியை சுலோச்சனா சேகர், பேராசிரியர் குரு பாலமுருகன், டாக்டர் கே.பாலசுப்பிரமணி, டாக்டர் இ.வெங்கடேசம், டாக்டர் அருண் பிரசாத் கே, டாக்டர் சி.சுரேந்திரன் ஆகியோரும் புவிப்பரப்பு தொழில்துறை நிபுணர்கள் திரு பி.ஆறுமுகம், திரு.எம்.பத்ரிநாத் ஆகியோரும் தலைமை தாங்குவார்கள்.