
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக 24 மணி நேர அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இரவு நேரத்தில் மகப்பேறு அடைந்த பெண்கள் குழந்தைகள் மற்றும் உடன் தங்கும் உதவியாளர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். அதுபோக மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் தேவை இருப்பதாகவும் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருவதாகவும் பணியாற்றி வரும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுநாள் வரையிலும் ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
உயிர்காக்கும் மருத்துவமனைகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
– செய்தியாளர் S.மோகன்