திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கதிரியமங்கலம் ஊராட்சி நொண்டி மாரியம்மன் கோவில் வட்டம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக்கு இன்று (18.07.2024) 84.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நான்கு வகுப்பறைக் கட்டிடம் மற்றும் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் வாழைமரம் தோரணங்கள் இசை வாத்தியங்கள் மற்றும் வண்ண வண்ண மாக்கோலங்களுடன் படுஜோராக நடந்து கொண்டிருந்த போது முதலில் மாவட்ட திமுக பொதுச்செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ வுமான தேவராஜ் முதலில் விழா நடைபெறும் இடத்தை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வந்தடைந்தார். பிறகு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரிய குமார் ஆகியோர் மூவரும் விழா மேடையில் 20 நிமிடங்கள் வரை அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டாக அறிவிக்கப்பட்டது.
இதனால் விழுந்து விழுந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மாணவர்களும் மிகுந்த ஏமாற்றத்துடன் வரிசையில் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் மற்ற சில பகுதிகளிலும் பள்ளி கட்டிடத் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணிசமான தொகையுடன் செய்தது வீணாகி போனது என்று கருதப்படுகிறது.
-S.மோகன், செய்தியாளர்