தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்பட்டதன் 4-ம் ஆண்டு நிறைவை கல்வி அமைச்சகம் அகில இந்திய கல்வி மாநாடு 2024-ல் இன்று புதுதில்லியில் மானெக்ஷா மைய அரங்கில் கொண்டாடியது. மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தின் கல்வி மற்றும் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு வசதியாக பிரத்யேக தொலைக்காட்சி அலைவரிசைகள், ஒரு தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை, பள்ளிகளில் பாடங்களை மகிழ்ச்சியுடன், மன அழுத்தம் இல்லாமலும் கற்றுக் கொள்வதற்கான அனுபவங்களைப் பெற 10 நாட்கள் புத்தகப்பை இல்லா நாட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், பள்ளிகளில் புதுமை கண்டுபிடிப்புகள் போட்டி, உள்ளிட்ட நிகழ்வுகளை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நான்காண்டு பயணம், புதிய தலைமுறையினருக்காக நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்கம் கற்றலை மிகவும் துடிப்பானதாகவும், நாட்டின் கல்வியை மேலும் எதிர்காலத்திற்குரியதாகவும் மாற்றியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜெயந்த் சவுத்ரி, ஆசிரியர்களின் மகத்தான பங்களிப்பு, மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அவர்களின் மதிப்புகளை எடுத்துரைத்தார். விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சமூகத்தின் மூன்று தூண்கள் என்று அவர் கூறினார். கல்வித் துறையில் தொடர்புடையவர்களின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் தொலைநோக்குக் கொள்கை எவ்வாறு வகுக்கப்பட்டது என்பதையும் திரு சவுத்ரி குறிப்பிட்டார். பழைய நடைமுறையின் பாரம்பரியத்திலிருந்து விலகி, 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப அது இயற்றப்பட்டதாகவும் அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி மேலும் கூறினார்.
-PIB