
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மொரீஷியஸ் பிரதமரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் அவர்களே, சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களின் முன்னேற்றம், செழிப்பு, பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றிற்கான நமது பகிரப்பட்ட நோக்கத்தில் மொரீஷியஸ் எப்போதும் ஒரு உத்திசார்ந்த நம்பகமான நாடாக இருக்கும்.”
மாலத்தீவு அதிபரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி மாலத்தீவு அதிபர் திரு முய்சு அவர்களே. மாலத்தீவு ஒரு மதிப்புமிக்க அண்டை நாடு. பிராந்திய அமைதி, முன்னேற்றம், செழிப்பு என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையில் மாலத்தீவு இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகும்.”
பிரான்ஸ் அதிபரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“எனது நண்பர் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோன் அவர்களே. இந்தியாவின் சுதந்திர தினத்தன்று உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நமது உத்திசார் ஒத்துழைப்பை நாங்கள் மதிக்கிறோம். நமது மக்களின் நலனுக்காக அதை மேலும் ஆழப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.”
பூடான் பிரதமரின் சமூக ஊடக எக்ஸ தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் சுதந்திர தினத்தன்று அன்பான வாழ்துகளைத் தெரிவித்த பூடான் பிரதமர் டோப்கேவுக்கு நன்றி கூறுகிறேன். வருங்காலங்களில் நமது நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்ந்து வலுப்பெறட்டும்.”