நாட்டில் நிலவும் வெப்ப அலை நிலைமை மற்றும் பருவமழை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை தொடர வாய்ப்புள்ளது என்று பிரதமரிடம் விளக்கப்பட்டது. இந்த ஆண்டு, பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பானதாகவும், இயல்பை விடவும் அதிகமாகவும் , தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விடவும் குறைவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து சம்பவங்களை தடுப்பதற்கும், கையாள்வதற்கும் முறையான பயிற்சிகள் வழக்கமான அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகள் மற்றும் பிற பொது இடங்களில் தீ தடுப்பு மற்றும் மின் பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். காடுகளில் தீயணைப்பு நடவடிக்கைகளைப் பராமரிப்பதற்கும், உயிரி எரிபொருளை உற்பத்தி செய்வதற்கும் வழக்கமான பயிற்சிகள் திட்டமிடப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காட்டுத் தீயை உரிய நேரத்தில் கண்டறிவதிலும், அதனை நிர்வகிப்பதிலும் “வேன் அக்னி” இணையதளத்தின் பயன்பாடு குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறை செயலாளர், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர், பிரதமர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
-PIB