மிசோரமில் உள்ள ‘ரோட்லாங் டபிள்யூ’ என்ற சிறிய கிராமத்தில், ‘நோண்டோவின் குடும்பம் உயிர்வாழ்வதற்கே தொடர்ச்சியான போராட்டத்தை எதிர்கொண்டது. ஒரு தினக்கூலி தொழிலாளியாக, நோண்டோ தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்க அயராது உழைத்தார். ஆயினும்கூட, எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலையின் கடுமையான யதார்த்தத்தை மாற்ற முடியவில்லை. ஒழுகும் கூரையும், இடிந்து விழும் சுவர்களும் கொண்ட அவர்களுடைய பாழடைந்த குடிசை வீடு, இடர்களுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் அவர்களுக்கு அளிக்கவில்லை.
மழைக்காலங்களில், கூரை வழியாக தண்ணீர் கசிந்து, அவர்களின் உடைகள் மற்றும் படுக்கைகளை நனைத்தது. குளிர்காலத்தில் தாங்க முடியாத அளவிற்கு குளிர் வாட்டியது. பலவீனமான வீட்டு கட்டமைப்பின் வழியாக கடும் காற்று வீசியது. ஒவ்வொரு குளிரான இரவிலும் குடும்பத்தின் ஆரோக்கியமும் மன அமைதியும் எங்கள் வீடு தாங்குமா என்ற கவலையை ஏற்படுத்தியது.
2017-ம் ஆண்டில் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் – கிராமப்புறம் (பி.எம்.ஏ.ஒய்-ஜி) பயனாளிகள் பட்டியலில் நோண்டோவின் பெயர் இடம்பெற்றபோது, நிவாரணம் கிடைத்தது. பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற குடும்பங்களுக்கு பாதுகாப்பான (பக்கா) வீடுகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், நோண்டோவுக்கு ஒரு பாதுகாப்பான வீட்டைக் கட்டுவதற்கான வாய்ப்பை வழங்கியது. உள்ளூர் அதிகாரிகளின் நிதி உதவி மற்றும் ஆதரவுடன், அவரது வீட்டின் கட்டுமானம் தொடங்கியது.
ஆண்டின் இறுதியில், இந்தக் குடும்பம் தங்கள் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தது. இது ஒரு எளிய மற்றும் உறுதியான கட்டமைப்பு. கடுமையான வானிலையைத் தாங்குவதற்கும் குடும்பத்திற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதற்கும் ஏற்ப இது கட்டப்பட்டது. புதிய வீடு நோண்டோவின் குடும்பத்திற்கு சிறப்பான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது. மழை நீர் தங்கள் வீட்டை வெள்ளத்தில் மூழ்கடிப்பதைப் பற்றியோ அல்லது குளிர்ந்த காற்று தங்கள் குழந்தைகளை நோய்வாய்ப்படுத்துவதைப் பற்றியோ அவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் வீடு இப்போது உறுதியாக நிற்பதுடன், அரவணைப்பையும் ஸ்திரத்தன்மையையும் வழங்கியது. புதிய பாதுகாப்பு, நோண்டோவுக்கு பெருமை மற்றும் சொந்த வீடு என்ற உணர்வையும் அளித்தது. முதல் முறையாக, அவரது குடும்பத்தினர் விருந்தினர்களை சங்கடமோ அல்லது பயமோ இல்லாமல் தங்கள் வீட்டிற்கு வரவேற்க முடிந்தது.
நோண்டோவின் கதை PMAY-G-ன் உருமாறும் சக்திக்கு ஒரு சான்றாகும், இது “அனைவருக்கும் வீடு” என்ற தொலைநோக்கை நிறைவேற்ற மத்திய அரசால் 2016-ல் தொடங்கப்பட்டது. குடிசை வீடுகளில் அல்லது வீடு இல்லாமல் வாழும் கிராமப்புற குடும்பங்களுக்கு அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான வீடுகளை வழங்குவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. PMAY-G-ன் முக்கிய அம்சங்களில் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் அளவு கொண்ட வீடுகளைக் கட்டுவதற்கு நிதி உதவி வழங்குவதும் அடங்கும். வீடற்ற குடும்பங்கள், கல்வியறிவு இல்லாத மற்றும் பெரியவர்கள் இல்லாத குடும்பங்கள் மற்றும் வருமானத்திற்காக தற்காலிக தொழிலாளர்களை நம்பியுள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுவினருக்கு இந்த திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட ஒடுக்கட்டப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இத்தகைய இலக்கு நடவடிக்கைகள் மூலம்,நோண்டோ போன்ற மிகவும் தகுதியான குடும்பங்கள் முதலில் பயனடைவதை இத்திட்டம் உறுதி செய்கிறது.
இன்று, நோண்டோவும் அவரது குடும்பத்தினரும் மன அமைதியுடன் வாழ்கின்றனர், வீடற்ற பயம் அல்லது இயற்கையின் சீற்றம் குறித்த கவலையோ சுமையோ இனி இல்லை. அவர்களின் பக்கா வீடானது ஒரு தங்குமிடத்தை விடவும் மேலானது; இது நம்பிக்கை, எதையும் தாங்கும் மனவலிமை மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாகும்.