சத்தீஸ்கரைச் சேர்ந்த கோல் இந்தியா துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் (எஸ்இசிஎல்) சிஎஸ்ஆர் திட்டமான “எஸ்இசிஎல் கே சுஷ்ருத்” மூலம் பயிற்சி பெற்று 2024 நீட் தேர்வு எழுதிய 40 மாணவர்களில் 39 பேர் கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது 98 சதவீதம் வெற்றி விகிதம் ஆகும். நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது, இது வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளது.
தகுதி பெற்ற மாணவர்களில் மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியின மாவட்டமான உமாரியாவைச் சேர்ந்த மகேந்திர நாயக் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். விவசாயியாக இருக்கும் தனது தந்தையால் நீட் தேர்வு பயிற்சிக்கு அனுப்ப இயலவில்லை என்றும், ‘எஸ்.இ.சி.எல் கே சுஷ்ருத்’ திட்டம் தனக்கு சிறந்த பயிற்சி வசதிகளைப் பெற உதவியது என்றும் நாயக் கூறினார்.
2023-ல் தொடங்கப்பட்ட ‘எஸ்.இ.சி.எல் கே சுஷ்ருத்’ முன்முயற்சி, பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, குறிப்பாக மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் நிலக்கரி சுரங்கப்பகுதிகளில் வசிப்பவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வு முறையின் அடிப்படையில் ஒரு போட்டித் தேர்வு வைக்கப்பட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பிலாஸ்பூரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டது. வழக்கமான தேசிய அளவிலான சோதனைத் தொடர்கள், வழிகாட்டுதல், தங்குமிடம், உணவு ஆகிய வசதிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்திற்கு எஸ்.இ.சி.எல் நிறுவனம் முழுமையாக நிதியளிக்கிறது. பயிற்சி வசதிகளைப் பெற முடியாத வளர்ச்சியடையாத பழங்குடி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு உயிர்நாடியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும், தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும், தங்கள் குடும்பங்களை ஆதரிக்க வேண்டும், தன்னம்பிக்கையை அடைய வேண்டும் என்ற கனவுகளை நிறைவேற்ற தயாராக உள்ளனர்.
சிறந்த கல்வி மூலம் நிலக்கரி சுரங்கப்பகுதிகளில் உள்ள சமூகங்களை மேம்படுத்துவதற்கான எஸ்.இ.சி.எல் நிறுவனத்தின் முயற்சிகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. தரமான பயிற்சி மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க எஸ்இசிஎல் உதவுகிறது, இது அவர்களின் கனவுகளைத் தொடரவும் சமூகத்திற்கு பங்களிக்கவும் பேருதவி செய்கிறது.
-PIB