
பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவு, தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல் போன்ற துறைகளில் இருதரப்பு உத்திசார்ந்த கூட்டாண்மையில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் ஆய்வு செய்தனர். கூட்டு உத்திசார்ந்த செயல் நடவடிக்கை 2025-29 வாயிலாக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர். பரஸ்பரம் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். உக்ரைன் மோதல் விரைவில் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இதற்கான முயற்சிகளில் இந்தியாவின் முழு ஆதரவை பிரதமர் திரு மோடி உறுதிபடுத்தினார்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மெலோனி ஆதரவு தெரிவித்து 2026-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் கீழ் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தலைவர்கள் ஒப்புகொண்டனர்.