
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் பெண்கள் ஆற்றிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று பிரதமர் கூறினார். ஆனால் இன்று அவர்கள் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தில் தீவிரமாகப் பங்கேற்பது மட்டுமல்லாமல், கல்வி முதல் வணிகம் வரை ஒவ்வொரு துறையிலும் முன்மாதிரியாக உள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் சக்தியின் வெற்றிகள் அனைத்து குடிமக்களுக்கும் பெருமை சேர்ப்பவையாக உள்ளன என்று திரு மோடி கூறியுள்ளார்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மூலம் மறுவரையறை செய்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இதில் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் கண்ணியத்தை உறுதி செய்தல், ஜன் தன் கணக்குகள் மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் அடிமட்ட அளவில் அதிகாரமளித்தல் ஆகியவை அடங்கும்.
உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்த ஒரு மைல்கல் சாதனை என்று அவர் குறிப்பிட்டார். லட்சக்கணக்கான பெண்கள் தொழில்முனைவோர்களாகவும், தங்கள் கனவுகளை சுதந்திரமாகத் தொடரவும் முத்ரா கடன்கள் எவ்வாறு உதவியுள்ளன என்பதையும் அவர் எடுத்துரைத்தார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்குவது அவர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பு உணர்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தையைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய இயக்கம் என்று அவர் வர்ணித்த பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பிரச்சாரத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி பலரை ஊக்குவித்து வருகின்றனர் என்பதை திரு மோடி உறுதிப்படுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகள் மூலம் பிரதமர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்;
“கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது.
தூய்மை இந்தியா மூலம் கண்ணியத்தை உறுதி செய்வதிலிருந்து ஜன் தன் கணக்குகள் மூலம் நிதி உள்ளடக்கம் வரை பல்வேறு முயற்சிகள், நமது பெண்கள் சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்தது. முத்ரா கடன்கள் லட்சக்கணக்கான பெண் தொழில்முனைவோர் தங்கள் சொந்த கனவுகளை நனவாக்கித் தொடர உதவியது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் பெண்கள் பெயரில் வீடுகள் வழங்குவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தையைப் பாதுகாக்க பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தேசிய அளவில் இயக்கத்தைத் தூண்டியது.
அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தொழில்கள் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட அனைத்துத் துறைகளிலும், பெண்கள் சிறந்து விளங்கி பலரை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.