மருத்துவ காப்பீடு செய்தவர்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக ஐஆர்டிஏஐ உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
அந்த வகையில், மருத்துவ காப்பீட்டின் கீழ் சிகிச்சை எடுக்கும் நபருக்கான கிளைம் தொகைக்கு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் 3 மணி நேரத்திற்கு முன் ஒப்புதல் வழங்க வேண்டும்.
இதில் தாமதம் ஏற்பட்டால், கூடுதலாக ஆகும் செலவை சம்பந்தப்பட்ட நிறுவனம், தனது சொந்த நிதியில் இருந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மருத்துவ காப்பீடுகளை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கும், அதில் உள்ள பலன்களை தக்க வைத்து கொள்வதற்கும் ஒரு மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டின் கீழ் சிகிச்சை பெறும் பாலிசிதாரர், இறக்க நேரிட்டால், காப்பீடு நிறுவனம் விரைவாக கிளைம் தொகையை வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு சிக்கல் ஏற்படாத வகையில் காப்பீடு தொகையை உடனடியாக வழங்குவதுடன், அவரின் உடலை சிக்கலின்றி பெற்று அதனை கொண்டு செல்வதற்கான செலவையும் காப்பீடு நிறுவனமே ஏற்க வேண்டும்.
கிளைம் மறு ஆய்வுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்க கூடாது.
100 % பணமில்லா கோரிக்கைகளுக்கான நடவடிக்கைகளை காப்பீடு நிறுவனங்கள் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இதற்காக தனி உதவி மையங்களை மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்து ஜூலை 31 ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-Sivashankar