
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா – 2025-ல் பார்வையாளர்களிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் 15 வரை ஓர் அரங்கை அமைத்திருந்தது. நீடித்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை இந்த அரங்கு காட்சிப்படுத்தியது.
மெய்நிகர் காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சைக்கிள் ஓட்டுதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செல்ஃபி போன்ற நவீன தொழில்நுட்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இந்த அரங்கிற்கு வருகை புரிந்தவர்களுக்கு கிடைத்தது. இந்த அரங்கிற்கு வருகைபுரிந்தவர்கள் நீடித்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான உறுதிமொழியையும் ஏற்றனர்.
இந்த அரங்கில் பார்வையாளர்களை கவர்ந்த மற்றொரு அம்சம் டால்பின் கண்காட்சி ஆகும். இதில் கங்கை நதி டால்பினின் புவியியல் குணாம்சம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம், புராண முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் சுவரொட்டிகள் இடம்பெற்றிருந்தன ன. நதிகளில் வாழும் டால்பின்கள் மற்றும் அவற்றின் சூழல் அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் விளையாட்டுகளிலும் பார்வையாளர்கள் ஈடுபட்டனர். இருமொழி காமிக்ஸ், சூப்பர் டோலியின் சாகசங்கள் ஆகியன குறிப்பாக இளம் பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்தன. அதே நேரத்தில் வீடியோ காட்சியானது டால்பின்களின் வாழ்விடங்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய அறிவூட்டலை வழங்கியது. அரங்கின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு துடிப்பான செல்ஃபி ஸ்டாண்டுகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.