வாலிக்கு வால் வளர ஈசன் அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை.
ஆடுதுறை பெருமாள் கோயில் என்றும் கபிஸ்தலம் என்றும், இந்த தலம் அழைக்கப் படுகின்றது.
இறைவன் திருநாமங்கள் தயாநிதீசுவரர், அழகு சடைமுடி நாதர், வாலி நாதர், சிட்டிலிங்க நாதர், குலை வணங்கீசர்.
இறைவியின் திருநாமங்கள் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடி அம்மை.
பொதுவாக சிவாலயங்களில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில், சற்று வித்தியாசமாக கருங்கல்லான நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகள் உள்ளன.
மேலும் இவர்கள் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது.
இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள்.
இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இங்கு விஷ்ணுதுர்க்கை கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறாள். எட்டு புஜங்கள் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக காட்சியளிப்பது சிறப்பாகும். வேறு எந்த துர்க்கை தலத்திலும் இம்மாதிரியான அதிசயம் நிகழ்வதாக தெரியவில்லை.