கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் (TNAU), இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. விண்ணப்பிக்க, ஜூன் 6ம் தேதி கடைசி நாள்.
கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து இந்த மாணவர்சேர்க்கை நடைபெறும்.
இந்த 3 கல்வி நிறுவனங்களிலும் ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை பயில நினைக்கும் மாணவர்கள் ஒரேயொரு விண்ணப்பத்தை இணையவழியில் பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது.
விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கான வழி காட்டுதல்கள், மாணவர் சேர்க்கைக்கான வழி முறைகள் உள்ளிட்ட விவரங்களை http://www.tnau.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக்கல்லூரிகளில் 14 பட்டப் படிப்புகளுக்கும் சேர்த்து 2,555 காலி இடங்களும், 28 இணைப்புக் கல்லூரிகளில் 2,806 காலியிடங்களும் உள்ளன.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு 240 இடங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 100 இடங்களும் உள்ளன.
மீன்வளப் பல்கலைக் கழகத்தில் 6 பட்டப் படிப்புகள், 3 தொழில்கல்வி பட்டப்படிப்புகளில் மொத்தம் 345 இடங்களும், 57 சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
மாணவர்கள் வரும் ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். கலந்தாய்வுக்கான தேதி, செயல் முறைகள் போன்ற வை பல்கலைக்கழக இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும்.
வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 94886 35077, 94864 25076 என்ற எண்களிலும், மீன் வளப் பல்கலைக்கழகம் தொடர்பான விவரங்களுக்கு 04365 – 256430, 94426 01908 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
-செய்தியாளர், தமிழ்மணி