மத்திய அரசின் வர்த்தகம்-தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தோல் ஏற்றுமதி கழகம் (CLE), 2024 செப்டம்பர் 29 அன்று சென்னை தீவுத்திடலில் “சோல்ஸ் ஃபார் சோல்ஸ்” என்ற மாரத்தான் ஒட்டத்தை நடத்துகிறது. இதன் முதன்மை நோக்கம் போதைப்பொருள் இல்லாத சமுதாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இந்திய காலணி துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும்.
தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்நிகழ்வில் மாணவர்கள், இளைஞர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழிலாளர்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சிப்காட், சென்னை பெருநகர காவல்துறை, சென்னை நகரில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும்;
3 கிமீ – 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு
5 கிமீ -12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு
10 கிமீ – 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு
மேலும் தகவல்கள் மற்றும் பதிவு செய்ய: https://beonly.in/solesforsouls/
ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் டி-சர்ட், பதக்கம், மின்-சான்றிதழ், தண்ணீர், காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
இந்த மாரத்தான் ஓட்டம், போதைப்பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யும்.
இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2024 செப்டம்பர் 28 அன்று மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CLRI) நடைபெறும் நிகழ்வில் விரிவாக விளக்கப்படும்.
தோல் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குனர் திரு ஆர்.செல்வம் பேசுகையில், 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது நோக்கத்தை அடைய, ஆரோக்கியமான மனமும் உடலமைப்பும் இருப்பது முக்கியம் என்றார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் சோல்ஸ் ஃபார் சோல்ஸ் மாரத்தான் ஓட்டம் ஒரு சிறிய படியாக அமையும் என்று அவர் தெரிவித்தார். சோல்ஸ் ஃபார் சோல்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தயம் என்பது தோல் ஏற்றுமதி கழகம் நடத்துகின்ற முதல் நிகழ்வாகும் என்று அவர் கூறினார். இதில் பங்கேற்பவர்கள் போதைப்பொருள் தடுப்பு என்ற குறிக்கோளை தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த மாரத்தான் ஓட்டத்தின் வெற்றியின் மூலம், எதிர்காலத்தில் மும்பை. கொல்கத்தா, டெல்லி, ஆக்ரா மற்றும் கான்பூர் போன்ற நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று அவர் கூறினார்.
தோல் ஏற்றுமதி கழகத்தின் தென் மண்டலத் தலைவர் திரு அப்துல் வஹாப் பேசுகையில், ஒரு உன்னத நோக்கத்தை அடைவதற்காக, இந்த முயற்சியில் ஈடுபடுவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். தோல் மற்றும் காலணி நிறுவனங்கள் சார்பாக இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் வெற்றி பெற வாழ்த்துவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம். அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார்.
– PIB