சென்னை சரகம்-3 வருமானவரி கூடுதல் ஆணையர் திரு எம் கார்த்திகேயன் வழிகாட்டுதலின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தில் அமைந்துள்ள கருத்தரங்கக் கூடத்தில், வருமானவரி பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த வருமானவரி பிடித்தம் குறித்த கருத்தரங்கத்தில் 70-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் செய்யும் வருமானவரி பிடித்தம் செய்பவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஏஐஇஎம்ஏ (AIEMA) சங்க துணைத் தலைவர் திரு ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். வருமானவரி துணை ஆணையர் திரு ராஜாமனோகர் தலைமை ஏற்று கருத்துரை வழங்கினார்.
அவர் தமது உரையில், வருமானவரி பிடித்தம் செய்பவர்கள் , முறையாக வருமான வரிப்பிடித்தம் / வரிவசூல் செய்வதன் அடிப்படை கடமை, வரிப்பிடித்தம் செய்த தொகையினை, காலத்தே மத்திய அரசின் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாயம், காலாண்டு படிவங்களை பிழையின்றி காலத்திற்குள் தாக்கல் செய்யவேண்டிய முக்கியத்துவம், வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவேண்டிய அவசியம் போன்றவை குறித்து தெளிவாக விளக்கினார். வருமானவரி வரி அலுவலர்கள் திரு ராஜாராமன், திரு தீபன் குமார், திரு செந்தில் குமார், வரிப்பிடித்தம் குறித்த தலைப்புகளில் எளிய முறையில் விளக்கினர்.
வருமானவரித் துறையால், வருமானவரி பிடித்தம் செய்பவர்களுக்கு உதவும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள், கருத்தரங்கத்தில் பங்குபெற்றவர்களுக்கு பகிரப்பட்டது.