ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளின் போது, நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். சீசன் காலத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் செய்து தரும்.
சபரிமலை சீசன் காலத்தில் வரும் பக்தர்களில் சிலர் மாரடைப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகிறது. இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க சபரிமலையில் பல இடங்களில் மருத்துவ உதவி மையங்களை கேரள அரசும், தேவசம்போர்டும் அமைத்துள்ளது.
இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைகள் நெருங்கியுள்ள நிலையில், இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சீசன் நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான போர்டு அறிவித்தது.
மேலும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விபத்தில் மரணம் அடைய நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையினை காப்பீட்டு நிறுவனத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் செலுத்தும். விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினசரி கூலி தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள் என தேவஸ்தான போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு என பிரசாந்த் தெரிவித்துள்ளார்.