மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால், லடாக் யூனியன் பிரதேசத்தின் மின்சாரம் மற்றும் வீட்டுவசதி துறைகளின் செயல்பாடுகளை லே-வில் இன்று ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், துறைகளின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்தார். இப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு காரணமாக இங்குள்ள துறைகள் எதிர்கொள்ளும் குறைபாடுகள் மற்றும் சிரமங்களை சமாளிக்க சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், லடாக் யூனியன் பிரதேசம், கழிவுப்பொருட்களை 100 சதவீதம் செயலாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், திட்டத்தின் விரிவான அறிக்கை இன்று தமக்கு வழங்கப்பட்டது என்றும் கூறினார். தூய்மைப் பணியாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த அமைச்சகம் ஆர்வமாக உள்ளது என்றும், இதன் மூலம் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது, தொழில் ரீதியான எந்தவொரு அபாயங்களையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் (அம்ருத்) 2.0-ன் கீழ், லே மற்றும் கார்கில் பகுதிகளில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPRs) விரைவில் இறுதி செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார். சரியான நேரத்தில் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து ஒப்புதல் அளிப்பது, இந்த முக்கிய திட்டங்களை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்யும். இது லே மற்றும் கார்கில் ஆகிய இரு இடங்களிலும் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கும்.
யூனியன் பிரதேசத்தில் வீடற்ற அனைத்து மக்களிடமும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் இதனால் அவர்கள் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் பலன்களைப் பெற முடியும் என்றும் திரு மனோகர் லால் கூறினார். லடாக்கில் எந்தவொரு நபரும் வீடில்லாமல் இருக்கக்கூடாது என்பதை அமைச்சகம் உறுதி செய்யும் என்று அவர் கூறினார். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
லடாக் அதன் பெரிய பரப்பளவு காரணமாக சூரிய மின்சக்தியை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். யூனியன் பிரதேசத்தில் 13 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இது உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், நாட்டின் பிற பகுதிகளின் எரிசக்தி தேவைகளையும் தீர்க்க உதவும்.
குளிர்காலத்தில் மின்சாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களைக் குறிப்பிட்ட அமைச்சர், கடுமையான குளிர்கால மாதங்களில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசின் அதிகப்படியான ஒதுக்கீட்டிலிருந்து யூனியன் பிரதேசத்தின் கூடுதல் மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்றார். மின்சாரத் துறையின் மனிதவள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
யூனியன் பிரதேசத்தின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் திட்டம் குறித்து பேசிய அமைச்சர், யூனியன் பிரதேச நிர்வாகத்தால் ரூ .1,080 கோடி மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கான ஒப்புதல் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் கூறினார். பிரதமரின் தீன்தயாள் தொகுப்புத் திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் திட்டங்கள் இந்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
வரும் நாட்களில் நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு வரையிலான மின்சார விநியோகம் மற்றும் விநியோக வழித்தடங்கள் அமைக்கப்படுவதுடன், இது இரு பிராந்தியங்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய பெரிதும் உதவும் என்றும் திரு மனோகர் லால் கூறினார். இந்தத் திட்டங்களுடன் தொடர்புடைய தடைகளை நீக்க போர்க்கால அடிப்படையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.