2024 நவம்பர் 19-ந் தேதி, ஜப்பான் தொழில் தர நிலைத் துறையின் திட்டமிடுதல் பிரிவின் மேலாளரும், உதவி இயக்குநருமான திரு தோஷிஹிகோ கோமிட்டி தலைமையிலான ஜப்பான் தர உத்தரவாத அமைப்பின் உயர்மட்டக் குழுவினர், சென்னையில் உள்ள தேசிய சோதனை இல்லத்திற்கு வருகைத் தந்தனர். இந்திய தயாரிப்புகளின் உலகளாவிய போட்டித்தன்மையை, குறிப்பாக ஜப்பானிய சந்தையில், மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையான, ஜப்பானிய தொழில்துறை தரநிலைகளுக்கு இணங்க இந்திய தயாரிப்புகளை சோதிப்பதற்கான சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
இந்தக் குழுவினரின் வருகையின் முதன்மை நோக்கம் ஆய்வகங்களில் தொழில்நுட்பத் திறன்களை மதிப்பிடுவதாகும். அவை ஜேஐஎஸ் தரங்களின் கடுமையான தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதாகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளுக்கு, குறிப்பாக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு என்டிஎச்-ன் மேம்பட்ட சோதனை உள்கட்டமைப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வதை தூதுக்குழு நோக்கமாகக் கொண்டது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பு சான்றிதழ்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஒத்துழைப்பு இந்திய உற்பத்தியாளர்களுக்கு ஜப்பான் மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் தங்கள் இருப்பை விரிவுபடுத்த புதிய வாய்ப்புகளை வழங்கும்.
தங்கள் பயணத்தின் போது, ஜப்பான் தூதுக்குழு இந்திய எஃகு தயாரிப்புகளை பரிசோதிப்பதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது, ஏனெனில் அவர்கள் சான்றளிக்கும் தயாரிப்புகளில் 50%-க்கும் அதிகமானவை எஃகு தொடர்பானவையாகும். ஜப்பான் பிரதிநிதிகள் தேசிய சோதனை இல்லத்தின் அதிநவீன சோதனை வசதிகளால் ஈர்க்கப்பட்டனர், குறிப்பாக உயர் மின்னழுத்த ஆய்வகத்தில் உயர் மின்னழுத்த சோதனை உபகரணங்கள். என்.டி.எச்-ன் விரிவான சோதனை உள்கட்டமைப்பு, பரந்த அளவிலான தொழில்துறை தயாரிப்புகளை உள்ளடக்கியது.
ஜப்பான் தர நிலை உறுதி அமைப்பு மற்றும் என்டிஎச் இடையேயான நீண்டகால கூட்டாண்மைக்கான திறனை தூதுக்குழு வலியுறுத்தியது. என்டிஎச்-ன் மேம்பட்ட வசதிகள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை சான்றளிப்பதற்கான முக்கிய ஆதாரமாக மாறும் என்று குறிப்பிட்டது. இந்த ஒத்துழைப்பு இரு நிறுவனங்களுக்கும் பயனளிப்பதுடன் மட்டுமல்லாமல், இந்திய உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். மேலும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும்.
சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து வளர்ந்து வருவதால், இந்த கூட்டாண்மை இந்திய தயாரிப்புகளின் தரம் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.