திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனச்செருவு பகுதியில் வசிக்கும் சுபாஷ் மற்றும் பூபதி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு பல மாதங்களாக வெளிநாட்டுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் பணம் கட்டி ஏமாந்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது உறவினர்களுடன் கடந்த நவம்பர் 25 திங்கட்கிழமை அன்று ஒன்று கூடி பூபதி என்பவரிடம் தங்களது பணத்தை திருப்பி கொடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த விரைந்து வந்த திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ரூகன் தலைமையிலான போலீசார் கூடியிருந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போலீசார் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அறிவுரை வழங்கினர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது தாங்கள் மூன்று வட்டிக்கு கடன் வாங்கி இப்பணத்தை கட்டியதாகவும் பணம் கொடுத்தவர்கள் தங்களை திருப்பி கொடுக்க வேண்டி தொல்லை தருவதால், நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது:- பணம் கட்டுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய அனுமதி பெற்று நிறுவனம் நடத்தி வருகின்றனரா என்று விசாரித்து பணம் கட்ட வேண்டும் என்று கூறினர்.
– S.மோகன், செய்தியாளர்