இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது. இது டிஜிட்டல் முன்னேற்றத்தில் உலகளாவிய முன்னணி மையமாக நாட்டை நிலைநிறுத்தியுள்ளது. கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML), டிஜிட்டல் ஆளுகை ஆகியவற்றின் மூலம் வேகமாக வளர்ச்சி ஏற்படுகிறது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு முக்கிய டிஜிட்டல் முன்முயற்சிகளும் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புச் சூழல்:
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் மைய தூண்களில் ஒன்று தரவு மையங்களின் விரிவாக்கமும் மேம்பாடும் ஆகும். கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு சேமிப்பு, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற பயன்பாடுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை ஆதரிப்பதில் இந்த மையங்கள் முக்கியமானவை. இந்தியாவின் டேட்டா சென்டர் தொழில் கணிசமான வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. தேசிய தகவல் மையம் (என்ஐசி) தில்லி, புனே, புவனேஸ்வர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் அதிநவீன தேசிய தரவு மையங்களை (என்டிசி) நிறுவியுள்ளது. இது அரசு அமைச்சகங்கள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு (பி.எஸ்.யூ) வலுவான கிளவுட் சேவைகளை வழங்குகிறது.
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள, வடகிழக்கு பிராந்திய தேசிய தரவு மையம் (NDC-NER) செப்டம்பர் 2020-ல் தொடங்கப்பட்டது. இந்த வசதி டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பது, சமூக-பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பது மற்றும் நம்பகமான, உயர் செயல்திறன் தரவு சேமிப்பு, கிளவுட் சேவை உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் பிராந்தியத்தில் பொது சேவைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிளவுட் சேவைகளை மேம்படுத்துதல்: என்ஐசி, மேக்ராஜின் பங்கு
இந்தியாவின் வளர்ந்து வரும் கிளவுட் சேவை சூழல் அமைப்பு அதன் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிப்பதில் முக்கியமானது. 2022-ல் தொடங்கப்பட்ட தேசிய தகவல் மையத்தின் (NIC) தேசிய கிளவுட் சேவைகளின் மேம்பாடு, தேசிய கிளவுட் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்த முற்படுகிறது. இது மின்-ஆளுகை சேவைகளை விரைவாகவும் திறமையாகவும் வழங்க உதவுகிறது. 300-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இப்போது கிளவுட் சேவைகளைப் பயன்படுத்துகின்றன. இது இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் விரைவான வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
ஜிஐ கிளவுட் (MeghRaj) முன்முயற்சி மத்திய, மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து அரசுத் துறைகளுக்கும் கிளவுட் வழியாக ஐசிடி சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாடு முழுவதும் கிளவுட் சூழல் அமைப்பை மேம்படுத்துகிறது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI):
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) என்பது அடிப்படை டிஜிட்டல் அமைப்புகளைக் குறிக்கிறது. அவை அணுகக்கூடிய, பாதுகாப்பான ஒன்றோடொன்று இணைந்து இயங்கக்கூடியவை. அத்தியாவசிய பொது சேவைகளை இவை ஆதரிக்கின்றன. இந்தியாவில், தொழில்துறை வளர்ச்சிக்கான பாரம்பரிய உள்கட்டமைப்பைப் போலவே, டிஜிட்டல் பொருளாதாரத்தை மாற்றுவதில் டிபிஐ முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதார், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) போன்றவை முக்கிய சாதனைகளில் அடங்கும். உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள திட்டமான ஆதார், பயோமெட்ரிக், மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குகிறது. இதுவரை, 138.34 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதோடு, நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. டிஜிலாக்கர், டிஜிட்டல் ஆவண சரிபார்ப்புக்கான தளமாகும். இது 37.046 கோடிக்கும் அதிகமான பயனர்களுக்கு வசதி செய்துள்ளது. அறிவு பகிர்வுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு (DIKSHA), உலகின் மிகப்பெரிய கல்வி தளமாகும்.
அரசாங்க கொள்முதலுக்கான அரசு இ-சந்தை (GeM), உள்ளிட்டவை பிற குறிப்பிடத்தக்க தளங்களில் அடங்கும் . தடுப்பூசி கண்காணிப்பு சேவைகளில் கோ-வின், ஆரோக்யா சேது ஆகியவை முக்கியமானவை. இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பில் இ சஞ்சீவினி (தொலைமருத்துவ சேவை), இ-மருத்துவமனை (மருத்துவமனை மேலாண்மை அமைப்பு) போன்றவை முக்கியமானவை. நீதித் துறையில் மின்னணு நீதிமன்றங்கள் நீதி வழங்கலில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
பொது சேவை மையங்கள் (CSCs):
மின்னணு – தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) நிர்வகிக்கப்படும் பொது சேவை மையங்கள் (CSCs) முன்முயற்சி, கிராமப்புற இந்தியாவுக்கு மின்-சேவைகளை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அக்டோபர் 2024 நிலவரப்படி, கிராம ஊராட்சி நிலையில் 4.63 லட்சம் உட்பட நாடு முழுவதும் 5.84 லட்சத்துக்கும் மேற்பட்ட சிஎஸ்சி-க்கள் செயல்படுகின்றன. இந்த முயற்சி அரசு திட்டங்கள் முதல் கல்வி வரை 800 க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்க உதவுகிறது.
டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியாவின் சிறந்த பயணம், புதுமை, உள்ளடக்கம், செயல்திறனுக்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலமும், ஆதார், யுபிஐ, டிஜிலாக்கர் போன்ற முன்முயற்சிகள் மூலமும், டிஜிட்டல் நடைமுறையில் இந்தியா உலகளாவிய முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. இந்த டிஜிட்டல் புரட்சி இந்தியாவின் உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய தென் பகுதி நாடுகளுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் தேசத்தை ஒரு முன்னோடியாக நிலைநிறுத்துகிறது.