புதுதில்லியில் 20.05.2024 அன்று நடைபெற்ற இந்தியப் போட்டி ஆணையத்தின் 15-வது ஆண்டு விழாவில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு ஆர். வெங்கடரமணி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், போட்டியை ஒழுங்குபடுத்துவதற்கான தேவை, போட்டியில் நியாயமற்ற தன்மையைத் தடுப்பது, விலை நிர்ணயம், நுகர்வோர் நலன் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.
சந்தைகள் செயல்பட முடியும், ஆனால் அரசால் உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் மட்டுமே செயல்பட முடியும் என்ற பால் சாமுவேல்சனின் மேற்கோளை சுட்டிக்காட்டிய திரு வெங்கடரமணி, அத்தகைய கட்டுப்பாடுகளில் போட்டி ஒழுங்குமுறையும் அடங்கும் என்று தெரிவித்தார். எளிதான சந்தை வாய்ப்பு, சமூக நலன் ஆகியவற்றுக்கு இடையே புதிய ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து அவர் பேசினார்.
போட்டிச் சட்டங்களின் சர்வதேச ஒருங்கிணைப்பு, சட்டங்களை ஒழுங்குப்படுத்துவதில் உள்ள சவால்கள், நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பொருளாதார சக்தியை மறுபகிர்வு செய்யும் பணி, டிஜிட்டல் மயமாக்குவதில் உள்ள சவால்கள் ஆகியவை குறித்தும் திரு வெங்கடரமணி குறிப்பிட்டார்.
.இந்த நிகழ்ச்சியில் அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறை, கல்வியாளர்கள், வர்த்தக சபைகள், சட்ட அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.