
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வகையான உதவிகளைப் பெற முக்கிய அடையாளமாக விளங்கும் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக நாள்தோறும் நாட்றம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆதார் சேவை மையத்திற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டுமே ஒரே ஒரு கவுன்டர் கொண்ட ஆதார் சேவை மையம் இயங்கி வருவதால் அன்றாடம் சேவைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொடுக்கப்படும் டோக்கன் கிடைக்காமல் பலதரப்பட்ட மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலம் தொடர்கிறது.
இன்னும் சில தினங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்க இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி போஸ்ட் ஆஃபீஸ் மற்றும் வங்கிகளில் அரசு கூடுதல் ஆதார் சேவை மையங்களை நாட்றம்பள்ளியில் அமைத்தால் இதுபோன்ற செயற்கையான இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாவதை தடுக்க முடியும் என்பதே இப்பகுதியில் வசிக்கும் பலரின் கோரிக்கையாக உள்ளது.
நாட்றம்பள்ளி தபால் நிலையத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை போதிய ஊழியர்கள் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– S.மோகன்