
PM participated in the 51st G7 summit meeting at Kananaskis, in Canada on June 17, 2025.
கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் வெளிநடவடிக்கை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ‘மாறிவரும் உலகில் எரிசக்தி பாதுகாப்பு: பன்முகத்தன்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜி7-ன் 50 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் தமது உரையில், எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் எரிசக்தி பாதுகாப்பும் ஒன்று என்பதை எடுத்துரைத்தார். உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை விரிவாகக் கூறிய அவர், கிடைக்கும் தன்மை, எளிதில் அணுகல், மலிவு விலை ஆகியவை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அணுகுமுறை தொடர்பான கொள்கைகள் என்று குறிப்பிட்டார். இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், அது பாரிஸ் உறுதிமொழிகளை முன்கூட்டியே வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். நிலையான, பசுமையான எதிர்காலத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அவர், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம், ஒரே சூரியன் – ஒரே உலகம் – ஒரே மின் கட்டமைப்பு போன்ற பல உலகளாவிய முன்முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
இவற்றை மேலும் வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சர்வதேச சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும், மோதல்களும் உலகளாவிய தென்பகுதி நாடுகளில் பலவீனமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார், மேலும் உலகளாவிய தெற்கின் குரலை உலக அரங்கில் கேட்க வைப்பதை இந்தியா தனது பொறுப்பாக எடுத்துக் கொண்டுள்ளது என அவர் கூறினார். சர்வதேச சமூகம் நிலையான எதிர்காலம் தொடர்பாக தீவிரமாக செயல்பட்டு, உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளைப் புரிந்துகொள்வது முக்கியம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த உலகநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவளித்ததற்காக சர்வதேச சமூகத்திற்கு நன்றி தெரிவித்த அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியா மீதான தாக்குதல் மட்டுமல்ல என்றும், முழு மனிதகுலத்தின் மீதான தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கும், ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதத்தை கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக்கூடாது என்றும், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு ஒருபோதும் வெகுமதி அளிக்கப்படக்கூடாது என்றும் அவர் கூறினார். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய பிரதமர், சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டிய அழுத்தமான கேள்விகளை எழுப்பினார்:
உலக நாடுகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டால் மட்டுமே அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலை புரிந்து கொள்ளுமா?
பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் எவ்வாறு ஒரே அளவில் எடுத்துக்கொள்ள முடியும்?
உலகளாவிய நிறுவனங்கள் பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் பார்வையாளர்களாக மட்டுமே இருக்குமா?
தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்தும் பிரதமர் பேசினார். செயல்திறனையும் புதுமைகளையும் மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். தொழில்நுட்பம் ஆற்றல் மிகுந்தது என்றும், தூய்மையான, பசுமையான எரிசக்தி முயற்சிகள் மூலம் அதை எவ்வாறு நிலையானதாக மாற்றுவது என்பது குறித்து உத்தி வகுப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையை விரிவாகக் கூறிய அவர், எந்தவொரு தொழில்நுட்பமும் பயனுள்ளதாக இருக்க, சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு அவை பயன்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய நிர்வாகப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதும், இந்தத் துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதும் முக்கியமானது என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு யுகத்தில், முக்கியமான கனிமங்களின் பாதுகாப்பான, மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகள் இருப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்தார். பன்முகத்தன்மை கொண்ட தரவு, பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மேலும் கூறினார்.
தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் உலகம், நிலையான எதிர்காலத்தை அடைய நாடுகளிடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றும், அதை அடைய, மக்களையும் இந்த பூமியையும் மையமாகக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.