
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை திமுக வெற்றி உறுதியாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வஞ்சப்புகழ்ச்சி முறையில் கூறியிருந்தாலும், அவர் உண்மையைத் தான் வெளிப்படுத்தியுள்ளார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தென் தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயர் வைப்பது, தேவர் பெருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது போன்றவற்றை அமமுக வாக்குறுதியாக அறிவித்தோம்.
அந்த தேர்தலுக்கு முன், பழனிசாமி 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்ததால் தென் தமிழகம் முழுவதும் உள்ள 105 சமூக மக்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. அந்த நிலையில் விமான நிலையத்திற்கான பெயர் குறித்து பழனிசாமி முன்வைத்த கோரிக்கையை நான் பொதுவான கருத்தாகவே எடுத்துரைத்தேன். ஆனால் அதை அரசியலுக்காக பழனிசாமிக்கு எதிரான பேச்சாக சிலர் தவறாக புரிந்து கொண்டனர்.
இன்றும் சொல்ல விரும்புகிறேன் — அமமுக அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர், எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். அதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியது அருமையான கருத்து. எங்களது வெற்றியின் காரணம் பழனிசாமிதான்; அவர் அதிமுக பொதுச்செயலாளராக நீடித்தால் எங்களுக்கு வெற்றி எளிதாகும். அவர் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் எனக் கூட கூறியுள்ளார்.
அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிப்பவர்கள், இந்த உண்மையை உணர வேண்டும். உதயநிதி ஸ்டாலின் வஞ்சப்புகழ்ச்சி போலச் சொன்னாலும் உண்மைதான் கூறியிருக்கிறார். தேர்தல் நெருக்கத்தில் எங்கள் கூட்டணியை நாங்கள் தீர்மானிப்போம். அமமுக சுதந்திரமாக செயல்படும்.
-அருள்குமார்