போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு தனிநபர் மட்டத்திலிருந்து தொடங்கி, நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். “போதை இல்லாத இந்தியா” என்ற தேசிய இலக்கை அடைய கல்வி நிறுவனங்கள், குடும்பங்கள், மருத்துவத் துறையினர், சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.



பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில், ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 31-வது நிறுவன நாள் விழாவையொட்டி, ‘போதைப்பொருள் இல்லாத பாரதம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒருவரின் உடல்நலத்தை மட்டும் பாதிக்கும் பிரச்சினையல்ல; கல்வி, உற்பத்தித் திறன், சமூக நல்லிணக்கம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, கர்நாடகாவில் நடைபெற்று வரும் தேசிய போலியோ ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி சொட்டு மருந்தையும் குடியரசுத் துணைத்தலைவர் வழங்கினார். மேலும், ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பு செய்த முன்னாள் துணைவேந்தர்களை கௌரவித்து பாராட்டினார்.
இந்நிகழ்வில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆந்திரப் பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர், கர்நாடக மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சரண் பிரகாஷ் ஆர். பாட்டீல், கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யு.டி. காதர் ஃபரீத், ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பகவான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
