தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ டாக்டர் என். இளையராஜாவிடம் பேரம் பேச முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ டாக்டர் என். இளையராஜாவை, சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். தாம் “இந்தியன் பொலிட்டிக்கல் டெமாக்ரடிக்ஸ்” என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பில் பேசுவதாகவும் அவர் அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது, அரசியல் தொடர்பான விவகாரத்தில் பேச விரும்புவதாக தெரிவித்த திருநாவுக்கரசுவின் பேச்சை ஏற்க மறுத்த இளையராஜா, உடனடியாக தொலைபேசி இணைப்பைத் துண்டித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மீண்டும் தொடர்புகொண்ட திருநாவுக்கரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தாங்கள் கூறும் வகையில் செயல்பட்டால் ரூ.35 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாக பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு எம்எல்ஏ இளையராஜா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததுடன், இனிமேல் தம்மை தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரத்தை வெளியில் தெரிவித்தால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும் என திருநாவுக்கரசு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, எம்எல்ஏ இளையராஜா கடந்த ஜூன் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின் முதல் கட்டமாக, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரை கடந்த ஜூலை 1-ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த பேரம் பேசும் முயற்சி நடைபெற்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும், காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, அவர்களைத் தேடி கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியிலும், கிண்டியில் உள்ள மற்றொரு விடுதியிலும் தங்கி, பேரம் பேசுவதற்கான திட்டங்களை அவர்கள் வகுத்திருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு பின்னணியில் ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனம் செயல்பட்டதாகவும், பேரம் பேசும் திட்டத்திற்காக சுமார் ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நிறுவனமே தொடர்புடையவர்களை சென்னையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைத்து, எந்தெந்த எம்எல்ஏக்களை அணுகுவது என்பது குறித்து திட்டமிட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவை தொடர்புகொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அந்த கார்ப்பரேட் நிறுவனத்துடன் தொடர்புடைய நபர்களையும் விசாரணைக்கு அழைத்து, இந்த சதித் திட்டத்தின் முழு பின்னணியை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைதாகியுள்ள திருநாவுக்கரசுவின் கார் ஓட்டுநரான கிருஷ்ணா என்பவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ள 9-வது நபர் ஆவார்.
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசும் முயற்சியில் கிருஷ்ணாவும் முக்கிய பங்காற்றியதாக போலீசார் சந்தேகிப்பதால், அவரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
