சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் இலவச இணைய வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளில் 32 இடங்களில் இலவச வைஃபை வசதி நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களான மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைப் பகுதிகளில் மக்கள் தடையின்றி இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் உயர்தர இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தும் பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, பயன்பாட்டில் இல்லாமல் இருந்த வைஃபை வசதிகள் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதியில் 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் 5 இடங்களிலும் இந்த இலவச வைஃபை வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
வைஃபை வசதியைப் பயன்படுத்த, செல்பேசியில் வைஃபையை இயக்கி, அதில் தோன்றும் இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வழங்கப்படும் QR Code-ஐ ஸ்கேன் செய்து, செல்பேசி எண்ணுக்கு வரும் OTP எண்ணை பதிவு செய்ததும் இணைய இணைப்பு கிடைக்கும். இந்த வசதியை பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பிற கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைஃபை வசதிகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், தேவையான இடங்களில் புதிதாக இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தவும் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு சிப் கட்டாயம்
இதனிடையே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாடுகளுக்கு சிப் பொருத்தாத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் முக்கிய சாலைகளில் மாடுகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கண்டறிந்து அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதுடன், மாடுகளுக்கு சிப் பொருத்தும் பணியையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் சுமார் 22,875 மாடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை ஆயிரத்திற்கும் குறைவான மாடுகளுக்கே சிப் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாடுகளுக்கு சிப் பொருத்தாமல் வைத்திருக்கும் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
