மாணவப் பருவத்தில் திரைப்படத் தயாரிப்பார்களாக உருவாகி வருவோரின் திறமைகளை வெளிகொணர 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா நல்ல வாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள திரைப்படத் தயாரிப்புப் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களின் 40-க்கும் அதிகமான குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இதை தவிர, ஜெர்மனியில் உள்ள பேபெல்ஸ்பெர்கின் கொனார்ட் வுல்ஃப் திரைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. அனிமேஷன், கதைப்படம், ஆவணப்படம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
புனேயில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள சத்தியஜித்ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், காட்சி அறிவியல் மற்றும் கலைகளுக்கான கே ஆர் நாராயணன் தேசிய கல்விக் கழகம் உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
எம்.ஜி. தனுஷ்வர்தனன் இயக்கிய ஷார்ட் டேல், டாம்ஜோஸ் இயக்கிய த்ரி பீஸ் லைட், தனுஷ் ராஜ் இயக்கிய தி ஃபைனல் கட் ஆகியவை சென்னையில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களின் குறுகிய கால திரைப்படங்களாகும்.
-PIB