கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் 193 பேர் கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் தற்போது வரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்ற முக்கிய குற்றவாளியை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக, எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த இவரை, மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 11 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.