சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ, 2024-ம் ஆண்டிற்கான, மாலுமிகளுக்கான விருதுகளில் இந்திய மாலுமிகளின் துணிச்சலையும் சிறந்த செயல்பாடுகளையும் அங்கீகரித்து விருதுகளை அறிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் அவிலாஷ் ராவத்தையும் எண்ணெய்க் கப்பல் மார்லின் லுவாண்டாவின் இந்தியக் குழுவினரையும் அங்கீகரித்து, அவர்களின் அசாதாரண உறுதிப்பாட்டிற்காக ஐஎம்ஓ கவுன்சில் விருது வழங்குகிறது. 2024 ஜூலை 10 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கப்பல் மீட்புப் பணியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி பிரிஜேஷ் நம்பியாருக்கும் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தின் குழுவினருக்கும் பாராட்டுக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
கடல்சார் பாதுகாப்புக் கவுன்சிலின் 109- வது கூட்ட அமர்வின் போது வருடாந்திர விருது வழங்கும் விழா, 02 டிசம்பர் 2024 அன்று லண்டனில் உள்ள ஐஎம்ஓ தலைமையகத்தில் நடைபெறும்.
2024 ஜனவரி 26 அன்று, 84,147 டன் சரக்குகளை ஏற்றிச் சென்ற மார்லின் லுவாண்டா, சூயஸிலிருந்து இஞ்சியோனுக்கு செல்லும் வழியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதனால் அது தீப்பிடித்தது, கடுமையான தீ ஆபத்தை உருவாக்கியது. கேப்டன் அவிலாஷ் ராவத் தீயணைப்பு முயற்சிகளில் விரைவாகவும் துணிச்சலாகவும் ஈடுபட்டு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தார்.
நான்கரை மணி நேரத்திற்குப் பிறகு, இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உள்ளிட்டவை உதவிகளை வழங்கின. இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, மார்லின் லுவாண்டா கப்பல், கடற்படை பாதுகாப்புடன் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றது.
கடலில் துணிச்சலுக்கான செயல்பாடுகளை கௌரவிப்பதற்காக மாலுமிகளுக்கு, ஐஎம்ஓ ஆண்டுதோறும் உறுப்பு நாடுகளிலிருந்து பரிந்துரைகளைப் பெற்று விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டு, 2024 ஏப்ரல் 15 வரை விருதுக்கான பரிந்துரைகள் பெறப்பட்டன. அவை நிபுணர்களின் மதிப்பீட்டுக் குழுவால் ஆராயப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், கௌரவிக்கப்பட்ட மாலுமிகளுக்கும் இந்திய கடற்படைக்கும் பாராட்டுத் தெரிவித்தார். ஐஎம்ஓ-வின் இந்த அங்கீகாரம் இந்திய மாலுமிகளின் அசாதாரண துணிச்சலையும் சிறந்த தொழில்முறை செயல்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் பல உயிர்களைக் காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுத்து, நமது நாட்டிற்கு மிகுந்த பெருமையைச் சேர்த்துள்ளது என்று அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.