இந்தியாவின் பிறப்பு விகிதம் மக்கள்தொகை நிலைத்தன்மைக்குத் தேவையான அளவை விட குறைந்திருப்பது கவலைக்குரியதாக இருப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான ஒரு செய்திப் பதிவை மேற்கோள் காட்டி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவின் பிறப்பு விகிதம் ஈடுசெய்யும் அளவான 2.1-க்கும் கீழ் சரிந்துள்ளதாகவும், குறிப்பாக உயர் கல்வி பெற்ற சமூகங்களிடையே இந்த சரிவு பல ஆண்டுகளாகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த தகவலின்படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) கடந்த பத்து ஆண்டுகளில் 2.3-இல் இருந்து 1.9 ஆக குறைந்துள்ளது. ஒரு நாட்டின் மக்கள்தொகையை நிலையான நிலையில் பராமரிக்க தேவையான பிறப்பு விகிதம் 2.1 எனக் கருதப்படும் நிலையில், இந்தியா தற்போது அந்த அளவிற்கும் கீழ் சென்றுள்ளது.
குறிப்பாக, சில பகுதிகளில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. டெல்லியில் இந்த விகிதம் 1.2 ஆக உள்ளதாக கூறப்படுவதுடன், அது சில ஐரோப்பிய நாடுகளைவிடவும் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பிறப்பு விகிதம் குறைவாக பதிவாகியுள்ளது. இதில் கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலும் பிறப்பு விகிதம் 1.5-க்கும் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள்தொகை நிலை அறிக்கையிலும் இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 ஆக குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த புள்ளிவிவரங்கள், இடம்பெயர்வு இல்லாத சூழலில் அடுத்த தலைமுறைக்குத் தேவையான அளவுக்கு குறைவான குழந்தைகளையே இந்திய பெண்கள் பெற்றெடுத்து வருவதை வெளிப்படுத்துகின்றன.
அதே நேரத்தில், 2023-ஆம் ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளி, 1.46 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியது. சீனாவில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்திருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்னும் நீடிப்பதாக ஐ.நா. அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக, தாய்மரணம், பாலினப் பாகுபாடு மற்றும் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல் போன்ற சவால்கள் தொடர்ந்து கவலைக்குரியவையாக உள்ளன.
இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், சில மாநில அரசுகள் மகப்பேற்றை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
