தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வந்தது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.
அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் பங்கேற்றனர்.
தேர்வுத்தாள்கள் மதிப்பீட்டு பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை 9.30 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 95.20 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 3,47,527 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்களை விட மாணவிகள் 3.81 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, ஈரோடு மாவட்டம் 98.07 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அரசுப் பள்ளிகள் அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், சிவகங்கை இரண்டாம் இடத்திலும், திருச்சி மூன்றாம் இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் 0.17 சதவீதம் உயர்ந்துள்ளது. சிறைவாசிகள் 250 பேர் தேர்வு எழுதியதில், 238 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் 13ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் தேர்வு முடிவுகளை அறியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற எண்ணிற்கு “Hi” என்று அனுப்பினால், தேர்வு முடிவுகள் நேரடியாக வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 18,687 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 17,676 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 7,627 ஆண் மாணவர்களும், 10,049 பெண் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 95.77 சதவீதமாகவும், ஆண்கள் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாகவும், பெண்கள் தேர்ச்சி விகிதம் 97.54 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல், மதுரை மாவட்டத்தில் 96.13 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தேர்வு எழுதிய 33,966 பேரில், 15,246 ஆண் மாணவர்களும், 17,405 பெண் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகள் மூலம் பெற்றுக்கொள்ளவும் அரசு தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
