காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கூடுவாஞ்சேரி அருகிலுள்ள மாடம்பாக்கம் கிராமத்தில் திருவள்ளுவர் கலை இலக்கிய மன்றத்தின் 10ஆம் ஆண்டு விழா கடந்த 22.03.2026 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மன்றத்தின் தலைவர் திரு. E. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். செயலாளர் திரு. டில்லிராஜ் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் திரு. முல்லைநாதன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 10ஆம் ஆண்டு சிறப்பு மலரை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. ரா. தீபக்ராஜ் அவர்கள் வெளியிட்டார்.



நிகழ்ச்சியில் மன்றத்தைச் சேர்ந்த கவிஞர்கள் திரு. ஆரோக்கிய பிரிட்டோ மற்றும் திரு. காசி ஆறுமுகம் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. பின்னர், “இடுக்கண் வருங்கால் நகுக” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினராக சன் டிவி புகழ் “அசத்தப் போவது யாரு” நிகழ்ச்சியின் கவிஞர் திரு. கிருபானந்தம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று திருக்குறள் ஒப்பிவைத்தல், நடனம், நாட்டுப்புறப் பாடல்கள், சிலம்பம், கவிதை, யோகா, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், “திருக்குறளில் வாழ்வியல் சிந்தனை”, “திருக்குறளில் பெண்ணிய சிந்தனை”, “திருக்குறளில் மருத்துவம்”, “பிறப்பால் அனைவரும் சமம்” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.



எங்கள் பகுதியில் உள்ள நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி R. பவித்ரா, 1330 திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.15,000 ரொக்கப் பரிசைப் பெற்றார். அதே பள்ளியில் பயிலும் மாணவர் R. ரூபேஷ், திருக்குறள் வினாடி வினாவில் கலந்து கொண்டு ரூ.1,200 ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் தமிழக முதல்வர் அவர்களால் பெற்றார்.

இவ்விரு மாணவர்களையும் மன்றம் சார்பில் பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை மன்ற உறுப்பினர் திரு. ஆரோக்கிய பிரிட்டோ தொகுத்து வழங்கினார். இறுதியாக பொருளாளர் திரு. முல்லைநாதன் நன்றியுரை வழங்க, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
வாழ்க தமிழ்!
வளர்க திருவள்ளுவர் கலை இலக்கிய மன்றம்!
செய்தியாளர்
M. பாலசுப்பிரமணியன்
