தமிழக அரசியலில் தற்போது காணப்படும் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய ‘மக்கள் இயக்கம்’ தொடங்கப்படுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்தன. அதன் பின்னர், பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, அவரது இடத்தில் நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடைபெறவில்லை.
அதற்கு பதிலாக, காரைக்குடி, சிங்காநல்லூர், ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், மதுரை (தெற்கு) மற்றும் பத்மநாபபுரம் ஆகிய ஆறு தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும், அந்தப் பொறுப்பை அவர் ஏற்கவில்லை. தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கிடையில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகக் கடிதம் வழங்கியதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அண்ணாமலையின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ரஜினிகாந்தின் அழைப்பை ஏற்காத அண்ணாமலை
இந்நிலையில், 05.06.2026 அன்று நண்பகல் 12 மணியளவில் சமூக வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடம் உரையாற்றிய அண்ணாமலை, “2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்து பாஜகவில் இணைந்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்காக பணியாற்றியதை வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.
மேலும், “புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜகவிலிருந்து விலகியுள்ளேன். இன்று முதல் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கிறோம். இதுவரை எனது அரசியல் பயணம் பல சவால்களையும் திருப்பங்களையும் கொண்டிருந்தது. அந்த அனுபவங்களை பகிர விரும்புகிறேன்” என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர், “ஐஐஎம் லக்னோவில் படித்துக் கொண்டிருந்தபோது, 25 வயதில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவில் மூன்று மாதங்கள் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், பாஜகவில் சேருவதற்கு முந்தைய நாள் நடிகர் ரஜினிகாந்த் என்னை தொடர்புகொண்டு, அவர் தொடங்கவிருந்த அரசியல் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
அவருடன் எனக்கு நீண்டகால நட்பு உள்ளது. அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பலமுறை விவாதித்திருக்கிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் என எண்ணினேன். ஆனால், கொரோனா காலகட்டத்தில் அரசியலுக்கு வராமல் இருப்பதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்தேன். அதன்பின் பாஜகவில் இணைந்தேன். பின்னர் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டபோது, அவர் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொண்டார்” என்று நினைவுகூர்ந்தார்.
“நான் பெருமைமிகு இந்தியன்; பாரம்பரிய தமிழன்”
அண்ணாமலை தனது அடையாளம் குறித்து பேசும்போது, “பலர் என்னிடம் ‘நீங்கள் தமிழரா? இந்தியரா?’ என்று கேட்பார்கள். எனது பெற்றோர் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வாழ்ந்ததில்லை. ஆனால் நான் லக்னோ, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கல்வி கற்றும், பணியாற்றியும் உள்ளேன். நான் பெருமைமிகு இந்தியனும், பாரம்பரியத்தைப் பேணும் தமிழனும் ஆவேன். தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து, எந்த சமரசமும் இன்றி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்” என்றார்.
பாஜகவிலிருந்து விலகியதற்கான காரணம்
தனது விலகல் குறித்து விளக்கிய அவர், “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று அப்போது கட்சித் தலைவராக இருந்த ஜே.பி. நட்டாவிடம் வலியுறுத்தினேன். ஆனால் எனது கருத்து ஏற்கப்படவில்லை.
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தபோதும், தமிழ்நாடு பாஜக சார்பில் அதற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். பிரதமர் நரேந்திர மோடியின் மீது எனக்கு அளவற்ற மரியாதை உள்ளது. இருப்பினும், சில முக்கிய பிரச்சினைகள் குறித்து கட்சித் தலைமையிடம் தொடர்ந்து எடுத்துரைத்தேன். கடந்த 18 மாதங்களாக கட்சித் தலைமையுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின.
அதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகும் முடிவை தெரிவித்தேன். ஆனால் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதால், அதனை நிறைவேற்றினேன். எனவே, கட்சியிலிருந்து விலகிய முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல” என்று கூறினார்.
புதிய அரசியல் இயக்கம் – 2031 தேர்தல் இலக்கு
தனது அடுத்தகட்ட அரசியல் திட்டத்தை அறிவித்த அண்ணாமலை, “இன்று முதல் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். இந்த இயக்கம், 2031 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் முழுமையான அரசியல் கட்சியாக உருவெடுத்து தேர்தலில் பங்கேற்கும்.
தமிழ் கலாச்சாரம், மாநில உரிமைகள் மற்றும் தேசிய பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ‘தமிழ் முதல்’ மற்றும் மதச்சார்பற்ற கொள்கை அடிப்படையில் இந்த இயக்கம் செயல்படும்.
முதலில் இயக்கத்திற்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு சில மாதங்கள் தேவைப்படும். அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் இது முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப்படும். அதன் பெயர் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இருப்பினும், அடிப்படை களப்பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.
அனைவரையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுத்து, பழைய அரசியல் நடைமுறைகளில் இருந்து வெளியே வர வேண்டும். பண பலம் மற்றும் குடும்ப அரசியல் சார்ந்த அணுகுமுறைகளைத் தவிர்த்து, தமிழக இளைஞர்களை முன்னிறுத்தி தூய்மையான அரசியலை உருவாக்குவதே எங்கள் இலக்கு” என்றார்.
மேலும், ‘betheleader.org’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்திய அவர், பொதுமக்கள் அதன்மூலம் உறுப்பினர்களாக இணையலாம் என தெரிவித்தார்.
அத்துடன், கோயம்புத்தூரில் ‘APJ Center for Ethics and Politics’ என்ற மையம் தொடங்கப்படவுள்ளதாகவும், அங்கு இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இது தொடர்பாக மேலும் விளக்கமளித்த அவர், “எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு முன்பு, இந்த மையத்தில் கட்டாயமாகப் பயிற்சி பெற வேண்டும். அவர்கள் மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றத்தை எதிர்பார்ப்பதற்கு முன், நாமே மாற வேண்டும். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட பகைமை இல்லை.
இந்த இயக்கம் மக்களின் நலனுக்கான பாதையாக அமைய வேண்டும். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளை எவ்வாறு பார்க்கிறேனோ, அதேபோல் பாஜகவையும் பார்க்கிறேன். எங்கள் இயக்கம் யாருடனும் போட்டியிடுவதற்காக அல்ல; மாற்றத்தை உருவாக்குவதற்காக செயல்படும்” என்று தெரிவித்தார்.
